கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை விவகாரம்; வைத்தியர் சுகுணனின் பதவி உயர்வுக்கு கண்டனம்.!
கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலைக்கு பணிக்குச் சென்ற முஸ்லிம் தாதிமார்கள் தலையை மறைத்திருந்தார்கள் எனக் கூறப்பட்டுப் பணியைப் பாரமெடுக்கத் தடை விதிக்கப்பட்டமைக்குக் காரணமானவராகவும், அதற்குப் பொறுப்புக்கூற வேண்டியவருமான வைத்தியர் சுகுணன் மட்டக்களப்பு வைத்தியசாலைக்குப் பதவி உயர்வுடன் மாற்றப்பட்டுள்ளமையை இலங்கை ஜம்இய்யத்துல் உலமா கவுன்சில் வன்மையாகக் கண்டித்துள்ளது.
இது குறித்து உலமா கவுன்சிலின் தலைவர் முபாறக் முப்தி வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
கடந்த அக்டோபர் 12 ஆம் திகதி, கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் நிர்வாகத்தினால் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. இவ்வாறானதொரு சூழலில் இது பற்றி சுகாதார அமைச்சும், பொது நிர்வாக அமைச்சும் உரிய விசாரணை மேற்கொள்ளாமை இந்த அரசாங்கத்திற்குப் பெரும் களங்கத்தைத் தரும் விடயமாகும்.
முஸ்லிம் தாதிமார் விவகாரம் இடம்பெற்ற போது கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு நிர்வாகப் பொறுப்பாக வைத்தியர் சுகுணனே செயற்பட்டார். அவர் விடுமுறையில் சென்றதாகக் கூறப்பட்டாலும், இந்த நவீன காலத்தில் அவருக்குத் தெரியாமல் இது நடந்ததா அல்லது தெரிந்தே நடந்ததா என்பது குறித்து அமைச்சு ஏன் இதுவரை விசாரணை நடத்தவில்லை?
மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தீர்மானம் குறித்துப் பொதுச் சேவை ஆணைக்குழு அறிந்திருக்கவில்லையா? அல்லது குறித்த பதவி உயர்வை அங்கீகரிக்கும்போது அத்தீர்மானம் கவனத்தில் கொள்ளப்படவில்லையா? என்பன போன்ற பல வினாக்களுக்கு அரசாங்கம் உடனடியாகப் பதில் வழங்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.


