யாழில் ஒரே நாளில் பறிபோன உயிர்கள்.!
யாழ்ப்பாணம் – வலிகாமம் வடக்கு பகுதியில் நேற்று (01) மாலை இடம்பெற்ற வெவ்வேறு சம்பவங்களில் நால்வர் உயிரிழந்துள்ளனர்.
தெல்லிப்பளை, அலுக்கைச் சந்தியில் மூவர் பயணித்த உந்துருளி வேகக் கட்டுப்பாட்டை இழந்து மதிலுடன் மோதியதில் இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.
மற்றுமொருவர் காயமடைந்து தெல்லிப்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விபத்தின் போது மதில் இடிந்து இருவர் மீதும் விழுந்தமையால் அவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
இதில் சுன்னாகம் மற்றும் நீர்வேலி பகுதிகளைச் சேர்ந்த 17 வயதுடைய பிரதீப் சஞ்சய், 36 வயதுடைய ரஜீவன் ஆகியோரே உயிரிழந்துள்ளனர்.
இதேவேளை, அளவெட்டி கிழக்கைச் சேர்ந்த 26 வயதுடைய இளைஞன் போதை ஊசி பயன்படுத்திய நிலையில் உயிரிழந்துள்ளார்.
நீண்டகாலமாக போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகியிருந்த குறித்த இளைஞன், நேற்றுமுன்தினம் மற்றுமொரு வழக்கு தொடர்பில் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், நேற்று போதை ஊசி பயன்படுத்தியபோது ஏற்பட்ட உடல்நலப் பாதிப்பு காரணமாக அவர் உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.
அவரது சடலம் பிரேத பரிசோதனைக்காக தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் தெல்லிப்பளை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
அத்துடன், வறுத்தலைவிளான் பகுதியில் துவிச்சக்கரவண்டியில் பயணித்த முதியவர் மீது பின்னால் வந்த உந்துருளி மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவங்களிலும் உயிரிழந்தவர்களின் சடலங்கள் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.



