திடீர் போ*தைப்பொருள் பரிசோதனை; சிக்கிய சாரதிகள்.!
யாழ்ப்பாணம் – மண்டைதீவு சோதனை முகாம் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட திடீர் போதைப்பொருள் பரிசோதனை நடவடிக்கையின்போது, ஹெரோயின் மற்றும் கஞ்சா பாவித்த குற்றச்சாட்டில் இரண்டு சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ். போதனா வைத்தியசாலையின் சட்ட மருத்துவ அதிகாரிகள் குழுவினரும் ஊர்காவற்துறைப் பொலிஸாரும் இணைந்து நேற்று திங்கட்கிழமை இந்தப் பரிசோதனை நடவடிக்கையை முன்னெடுத்திருந்தனர்.
மண்டைதீவுப் பகுதியில் வாகன சாரதிகள் மீது மேற்கொள்ளப்பட்ட இந்தத் திடீர் சோதனையின்போது, பேருந்து சாரதி ஒருவரும் மற்றுமொரு வாகனச் சாரதியும் ஆபத்தான போதைப்பொருட்களான ஹெரோயின் மற்றும் கஞ்சா ஆகியவற்றைப் பயன்படுத்தியிருக்கின்றமை பரிசோதனையில் கண்டறியப்பட்டது.
அதனைத் தொடர்ந்து அவர்கள் உடனடியாகக் கைது செய்யப்பட்டு, மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
அண்மைக்காலமாக வீதி விபத்துக்கள் பாரியளவில் அதிகரித்துள்ளமைக்கு வாகன சாரதிகளின் இத்தகைய போதைப்பொருள் பாவனையும் ஒரு முக்கிய காரணமாக விளங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.


