ஹோர்முஸ் நீரிணையில் இந்தியாவுக்கு முக்கிய சலுகை – ஈரான் அறிவிப்பு!
இந்தியா, சீனா, ஈராக் மற்றும் கட்டார் ஆகிய நாடுகளின் கப்பல்களுக்கு ஹோர்முஸ் நீரிணை ஊடான போக்குவரத்துக் கட்டுப்பாடுகளில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக ஈரானிய நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
உலகின் முக்கியமான எண்ணெய் போக்குவரத்துப் பாதைகளில் ஒன்றான ஹோர்முஸ் நீரிணையில் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், ஈரானின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஈரானிய நாடாளுமன்றத்தின் தேசிய பாதுகாப்பு மற்றும் வெளிவிவகாரக் கொள்கைக் குழுவின் பிரதித் தலைவர் அமீர் ஹயாத் மொகத்தம் (Amir Hayat Moghadam) இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.
இந்தியாவிலிருந்து மருந்துப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு வசதியாக இந்தியக் கப்பல்களுக்கு இந்தச் சலுகை வழங்கப்பட்டுள்ளதாகவும், சீனாவின் அரசியல் ஆதரவைப் பெறும் நோக்கில் அந்நாட்டுக் கப்பல்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், இந்திய மற்றும் சீனக் கப்பல்களிடம் போக்குவரத்துக் கட்டணம் அறவிடப்படுவதாகவும், கட்டார் கப்பல்களுக்கு கட்டண விலக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஈராக் கப்பல்களுக்கான கட்டண நடைமுறை குறித்து அவர் தெளிவுபடுத்தவில்லை.


