புதுப்பிக்கத்தக்க மின்சக்தி உற்பத்தி இலக்குகளை அடைவதில் பாரிய சவால்கள்.!
மட்டக்களப்பு மாவட்டத்தில் பெரிய அளவிலான புதுப்பிக்கத்தக்க சக்தி உற்பத்தியாளர்களுக்கு மின்சார உற்பத்திக்கான அனுமதிப் பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ள நிலையில், சாதாரண வீட்டு மட்டத்தில் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் சிறு உற்பத்தியாளர்களுக்கு அனுமதி வழங்கப்படாமல் புறக்கணிக்கப்படுவது முறையற்ற செயற்பாடாகும்
2027, 2028, 2029ஆம் ஆண்டுகளுக்கான மின்சார உற்பத்தி இலக்குகளை அடைவதில் தற்போதைய கொள்கை மாற்றங்களும் நடைமுறைச் சிக்கல்களும் தடையாக அமைந்துள்ளன. மின்சார உற்பத்தியாளர்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளமை முதலீடுகளைப் பாதிக்கின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் வலியுறுத்தியுள்ளார்.
இலங்கையின் மின்சார உற்பத்தி முறைமைகள், மின்கட்டணத் திருத்தங்கள் மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி வளங்களின் பயன்பாடு தொடர்பில் வலுசக்தி அமைச்சரிடம் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் இன்றைய தினம் (05.11.2026) நாடாளுமன்றத்தில் கேள்விகளை முன்வைத்தார்.
இதற்குப் பதிலளித்த வலுசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக, தேசிய மின்கட்டமைப்பின் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்துவதற்கான உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
மேலும், எதிர்வரும் மூன்றாண்டு காலப்பகுதியில் புதுப்பிக்கத்தக்க சக்தி வளங்களை மேம்படுத்துவதற்கு விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம், இலங்கையின் மொத்த மின்சார உற்பத்தியில் ஒவ்வொரு மின்னுற்பத்தி முறைமையும் சதவீத அடிப்படையில் எவ்வளவு பங்களிப்புச் செய்கின்றது என்பதையும், அதிக செலவுடைய மற்றும் குறைந்த செலவுடைய மின்சார உற்பத்தி முறைமைகள் எவை என்பதையும் வலுசக்தி அமைச்சரிடம் வினவினார்.
அத்துடன், மின்சார உற்பத்தி முறைமைகளில் காணப்படும் அதிக செலவுப் போக்கினைக் குறைப்பதற்கான திட்டங்கள் உள்ளனவா எனவும் கேள்வியெழுப்பினார்.
2025ஆம் ஆண்டு தொடக்கம் இதுவரை எத்தனை தடவைகள் மின்கட்டணங்கள் திருத்தம் செய்யப்பட்டுள்ளன, மின்கட்டணத் திருத்தங்கள் காரணமாக வீட்டுப் பாவனையாளர்கள் சராசரியாக எவ்வளவு மேலதிகக் கட்டணத்தைச் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது, குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கான நிவாரண வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளனவா என்பன தொடர்பிலும் அவர் கேள்விகளை முன்வைத்தார்.
இதற்குப் பதிலளித்த வலுசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக, 2025ஆம் ஆண்டில் இரண்டு தடவைகளும், 2026ஆம் ஆண்டில் இரண்டு தடவைகளும் மின்கட்டணங்கள் திருத்தம் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
மின்கட்டணத் திருத்தங்கள் காரணமாக மின்பாவனையாளர்கள் மேலதிகமாகக் கட்டணம் எதனையும் செலுத்தவில்லை எனக் குறிப்பிட்ட அமைச்சர், மின்கட்டண அதிகரிப்பின்போது மின்பாவனையாளர்களுக்கு கட்டணத்தின் ஊடாக நிவாரணம் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
அந்த வகையில், மின்பாவனையாளர்களுக்கு வழங்கப்பட்ட நிவாரணங்கள் பின்வருமாறு,
- 0 – 30 மின் அலகுகளுக்கு ஒரு அலகிற்கு 5 ரூபாய்
- 31 – 60 மின் அலகுகளுக்கு ஒரு அலகிற்கு 9 ரூபாய்
- 61 – 90 மின் அலகுகளுக்கு ஒரு அலகிற்கு 14 ரூபாய்
- 91 – 120 மின் அலகுகளுக்கு ஒரு அலகிற்கு 20 ரூபாய்
- 121 – 180 மின் அலகுகளுக்கு ஒரு அலகிற்கு 28 ரூபாய்
மேலும், புதுப்பிக்கத்தக்க சக்தி வளங்களைப் பயன்படுத்துவோருக்கு வழங்கப்படும் கட்டணங்கள் திருத்தப்படும் என்றும், நடைமுறையில் காணப்படும் சிக்கல்களுக்குத் தீர்வுகள் முன்வைக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
புதுப்பிக்கத்தக்க சக்தி வளங்களின் பயன்பாடு தொடர்பில் புதிய திட்டங்கள் வகுக்கப்படும் என்றும், புதிய முதலீட்டாளர்களுக்கு விசேட ஊக்குவிப்புத் தொகைகள் வரவு–செலவுத் திட்டத்தின் ஊடாக வழங்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
அமைச்சரின் பதிலைத் தொடர்ந்து மேலதிக கேள்விகளை முன்வைத்த நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம், 2027ஆம் ஆண்டு 642 மெகாவோட், 2028ஆம் ஆண்டு 300 மெகாவோட் மற்றும் 2029ஆம் ஆண்டு 450 மெகாவோட் மின்சாரத்தைப் புதுப்பிக்கத்தக்க சக்தி வளங்கள் ஊடாக உற்பத்தி செய்வதற்கு அரசாங்கம் இலக்குகளை நிர்ணயித்துள்ளதாகக் குறிப்பிட்டார்.
எனினும், தற்போதைய கள நிலவரங்களின்படி இந்த இலக்குகளை அடைவதில் பாரிய சந்தேகங்களும் சவால்களும் நிலவுவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
குறிப்பாக, அண்மைக் காலமாகப் புதுப்பிக்கத்தக்க சக்தி வளங்களைப் பயன்படுத்துவோருக்கும் மின்சார உற்பத்தியாளர்களுக்கும் வழங்கப்பட்டு வந்த விசேட கொடுப்பனவுகள் மற்றும் சலுகைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளமை, இத்துறை மீதான ஈர்ப்பைக் கணிசமாகக் குறைத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
அத்துடன், பகல் நேரத்தில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தின் அளவுக்கு அமையவே கட்டணம் செலுத்தப்படும் என்ற புதிய நடைமுறையானது, உற்பத்தியாளர்களின் வருவாய் ஈட்டும் திறனை நேரடியாகப் பாதிப்பதுடன், அவர்கள் மேற்கொண்ட முதலீட்டைத் திரும்பப் பெறுவதற்கான காலத்தையும் நீடிக்கச் செய்வதாக அவர் சுட்டிக்காட்டினார்.
இத்தகைய கொள்கை மாற்றங்களும் நடைமுறைச் செயற்பாடுகளும் மின்சார உற்பத்தியாளர்களை ஊக்குவிப்பதற்குப் பதிலாக, அவர்களை மேலும் பலவீனப்படுத்தும் நடவடிக்கைகளாகவே அமைந்துள்ளதாகவும் சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்தார்.
மட்டக்களப்பில் சிறு மின்சார உற்பத்தியாளர்கள் புறக்கணிக்கப்படுகின்றனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் பெரிய அளவிலான புதுப்பிக்கத்தக்க சக்தி உற்பத்தியாளர்களுக்கு மின்சார உற்பத்திக்கான அனுமதிப் பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ள நிலையில், சாதாரண வீட்டு மட்டத்தில் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் சிறு உற்பத்தியாளர்களுக்கு அனுமதி வழங்கப்படாமல் புறக்கணிக்கப்படுவது முறையற்ற செயற்பாடாகும் என அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும், கடந்த ஆண்டில் புதுப்பிக்கத்தக்க மின்சார உற்பத்திக்காகப் பதிவு செய்தவர்களுக்கும் இதுவரை அனுமதி வழங்கப்படாமல் தாமதிக்கப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டார்.
அத்துடன், நடப்பு ஆண்டு வரவு – செலவுத் திட்டத்தின் ஊடாக வீட்டு மின்சார உற்பத்திக்காக அறிவிக்கப்பட்ட புதிய கட்டமைப்புத் திட்டமும் இதுவரை முழுமையாக நடைமுறைப்படுத்தப்படாமல் உள்ளதாக அவர் தெரிவித்தார்.
இவ்வாறான தடைகளும் நடைமுறைச் சிக்கல்களும் நிலவும் சூழலில், அரசாங்கம் திட்டமிட்டுள்ளவாறு 2027, 2028 மற்றும் 2029ஆம் ஆண்டுகளில் புதுப்பிக்கத்தக்க சக்தி வளங்கள் ஊடான மின்சார உற்பத்தி இலக்குகளை அடைவது சாத்தியமற்ற ஒன்றாகவே காணப்படுகின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் வலியுறுத்தினார்.
புதுப்பிக்கத்தக்க சக்தி வளங்களை மேம்படுத்துவதற்கான அரசாங்கத்தின் இலக்குகள் நடைமுறையில் சாத்தியமாக வேண்டுமெனில், மின்சார உற்பத்தியாளர்களுக்கான சலுகைகள், அனுமதிப் பத்திரங்கள் வழங்கும் நடைமுறைகள் மற்றும் முதலீட்டாளர்களை ஊக்குவிக்கும் கொள்கைகள் தொடர்பில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டியது அவசியமாகும் என அவர் சுட்டிக்காட்டினார்.


