இலங்கைக்கு எதிரான T-20 தொடரை 2:0 எனும் கணக்கில் இங்கிலாந்து கைப்பற்றியுள்ளது!
இரண்டாவது டி:20 கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி, இலங்கை அணியை ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி 2-0 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியது.
இந்தப் போட்டியில் டி:20 கிரிக்கெட் வரலாற்றில் 15,000 ஓட்டங்களை கடந்த முதல் துடுப்பாட்ட வீரர் என்ற சாதனையை இங்கிலாந்து அணியின் ஜோஸ் பட்லர் படைத்தார்.
அத்துடன் லியாம் டாசன் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
சவுதாம்ப்டனில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற முதல் டி:20 போட்டியில் 119 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்த போட்டியை நடத்தும் அணி, மேகமூட்டமான சூழலில் நடைபெற்ற அடுத்த போட்டியிலும் இலங்கைக்கு எதிராக இந்த வடிவிலான போட்டிகளில் தொடர்ந்து 14 ஆவது வெற்றியைப் பதிவு செய்தது.
கார்டிஃப், சோபியா கார்டன்ஸ் மைதானத்தில் மேகமூட்டமான சூழலில் நாணய சுழற்சியில் வென்று பந்துவீசத் தீர்மானித்த இங்கிலாந்து அணி இலங்கை அணியை 145 ஓட்டங்களுக்குள் கட்டுப்படுத்தியது.
இலங்கை அணி சார்பில் பத்தும் நிஸ்ஸங்க 37 (21) ஓட்டங்களையும், அணித் தலைவர் சரித் அசலங்க 31 (31) ஓட்டங்களையும் அதிகபடியாக எடுத்தனர்.
பந்து வீச்சில் இங்கிலாந்து சார்பில் அதிகபடியாக லியாம் டாசன் மூன்று விக்கெட்டுகளையும், ஜோஃப்ரா ஆர்ச்சர் மற்றும் ஜேமி ஓவர்டன் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டினை வீழ்த்தினர்.
பின்னர், 146 ஓட்டம் என்ற இலக்கினை சேஸிங் செய்த இங்கிலாந்து, ஆட்டத்தின் முதல் நான்கு ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 48 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில், தொடக்க ஆட்டக்காரர்களான அநியூரின் டொனால்ட் (21) மற்றும் பட்லர் (30) ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்ததால் அணியின் ஓட்ட எண்ணிக்கை 55-2 என மாறியது.
அதையடுத்து, அதிரடி ஆட்டக்காரரும் தலைவருமான ஹாரி ப்ரூக் ஒரே ஓவரில் மூன்று சிக்ஸர்களை விளாசிய போதிலும், வனிந்து ஹசரங்கவின் பந்துவீச்சில் ஈஷான் மலிங்கவிடம் பிடிகொடுத்து 23 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.
பின்னர் டாம் பேன்டன் 24 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 52 ஓட்டங்கள் குவித்து அணியின் நிலையைச் சீராக்கினார்.
இதன் மூலம், 47 பந்துகள் (12.1) ஓவர்கள் மீதமிருந்த நிலையில் இங்கிலாந்து அணி மற்றொரு எளிதான வெற்றியை பதிவு செய்தது.