மானிப்பாய் தவிசாளர் உடனடியாக பதவி விலக வேண்டும்; இளைஞர்கள் கொந்தளிப்பு.!
மக்களது பிரச்சினைகளை அறிந்து உடனடியாக சம்பவ இடத்திற்கு வர முடியாத மானிப்பாய் பிரதேச சபையின் தவிசாளர் கந்தையா ஜெசீதன் உடனடியாக தனது பதவியை இராஜினாமா செய்ய வேண்டும் என நவாலி பகுதி இளைஞர்கள் தெரிவித்தனர்.
இது குறித்து அவர்கள் மேலும் தெரியவருகையில்,
கல்லுண்டாய் குப்பைமேடானது வாரத்தில் இரண்டு தடவையாவது பற்றி எரிகிறது. இன்றும் (நேற்று) இந்த குப்பைமேடானது பற்றி எரிகிறது. இதனால் நமது குடியிருப்புகள் இருக்க முடியாத அளவுக்கு புகை மண்டலமாக காணப்படுகின்றது.
நாங்கள் வீடுகளில் வயோதிபர்களையும், குழந்தை பிள்ளைகளையும் வைத்திருக்கின்றோம். அந்தப் புகையால் அவர்கள் அன்றாடம் பல இன்னல்களை எதிர்கொள்கின்றனர். வீதியால் செல்பவர்கள் செல்ல முடியாத நிலை காணப்படுகிறது. விபத்துக்கள் ஏற்படக்கூடிய அபாயம் காணப்படுகிறது.
இதனை தீர்க்குமாறு வருடக்கணக்காக போராடுகின்றோம் ஆனால் இதுவரை தீர்வு கிடைக்கவில்லை.
குப்பைமேடு எரிகின்ற நிலையில் நாங்கள் அந்த இடத்திற்கு வந்து நின்று மானிப்பாய் பிரதேச சபையின் தவிசாளர் கந்தையா ஜெசீதனுக்கு அழைப்பு மேற்கொண்டோம். ஆனால் அவர் இங்கு வர முடியாது என மறுத்து விட்டார்.
சாவகச்சேரியில் இடம்பெறுகின்ற உண்ணாவிரத போராட்டத்திற்கு சென்று அங்கு நமது தவிசாளர் கலந்து கொள்கிறார். ஆனால் அவரை தெரிவு செய்த எமது பிரச்சினையை தீர்க்கவில்லை. நாங்கள் அல்லல் வரும்போது அழைத்தும் அவர் வரவில்லை.
தெரிவு செய்தது நாங்கள் ஆனால் சாவகச்சேரியிலா போராட்டம் செய்வது? எமது பிரச்சினையை முதலில் தீர்த்து விட்டு தான் வேறு எங்காவது செல்ல வேண்டும். அதை விட்டு நாங்கள் இங்கு அல்லலுறும்போது நீங்கள் அங்கு சென்று படம் காட்டக்கூடாது.
உங்களுக்கு இந்த பதவி தேவையில்லை நீங்கள் உடனடியாக பதவியில் இருந்து விலகுங்கள். மக்களது பிரச்சினையை கருத்தில் கொள்பவர்களுக்கே இந்த பதவி தேவையானது. சபையின் உறுப்பினர் பகீரதன் இந்த இடத்திற்கு வருகை தந்து விரைந்து செயல்பட்டு கொண்டிருக்கின்றார். அவ்வாறானவர்கள் தான் எமக்கு தேவை. எனவே தவிசாளர் நீங்கள் இந்த பதிவில் இருந்து விலகி விட்டு பகீரதன் அவர்களை தவிசாளர் ஆக்குங்கள். நாங்கள் அவருக்கு ஒத்துழைப்பு வழங்குவோம் அவர் எமக்கு தீர்வு வழங்குவார் என்றனர்.