வடமராட்சி கிழக்கு அபிவிருத்தி திட்டங்களுக்கு முக்கியத்துவம் – ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் தீர்மானம்
.
யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு பிரதேச ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம், பிரதேச ஒருங்கிணைப்பு குழுத் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான றஜீவன் ஜெயசந்திரமூர்த்தி தலைமையில் இன்று (03) காலை 9.45 மணியளவில் வடமராட்சி கிழக்கு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
கூட்டத்தின் ஆரம்பத்தில் தலைமையுரையாற்றிய றஜீவன் ஜெயசந்திரமூர்த்தி, நாட்டின் வருமானத்தை அதிகரிக்கும் வகையில் சுற்றுலா மையங்களின் அபிவிருத்திக்கு முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டும் எனத் தெரிவித்தார்.
சுற்றுலா அபிவிருத்தி திட்டங்களுக்கு நியாயமற்ற எதிர்ப்புகள், விசமப் பிரசாரங்கள் மற்றும் பொய்யான பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
வெற்றிலைக்கேணி கடற்கரையை ‘நீலக் கடற்கரை’ (Blue Beach) திட்டத்தின் கீழ் அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும், பிரதேச அபிவிருத்திக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
மேலும், மக்களுக்கு நன்மை பயக்கும் நல்ல திட்டங்களுக்கு தாம் ஆதரவளிப்பதாகவும், மக்களுக்கு எதிரான நடவடிக்கைகளை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் குறிப்பிட்ட அவர், மக்களுக்கு கிடைக்க வேண்டிய நன்மைகளை எவரும் தடுக்கக் கூடாது என வலியுறுத்தினார்.
மக்களின் நலன்களை அடிப்படையாகக் கொண்டே அபிவிருத்தி தொடர்பான முடிவுகள் எடுக்கப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, கடந்த கூட்டத்தின் அறிக்கை வாசிக்கப்பட்டு, தேவையான திருத்தங்களுடன் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
அத்துடன், பிரதேச சபையினால் முன்னெடுக்கப்பட வேண்டிய வீதி அபிவிருத்தி பணிகள் மற்றும் பல்வேறு செயற்திட்டங்களுக்கான அனுமதிகளும் வழங்கப்பட்டன.
இந்திய முதலீட்டு திட்டம் தொடர்பில் தீர்மானம்
இதேவேளை, இந்திய நிறுவனம் ஒன்றின் முதலீட்டுத் திட்டத்திற்காக ஆழியவளை பகுதியில் காணி வழங்குவது தொடர்பாக கூட்டத்தில் நீண்ட நேரம் விவாதம் இடம்பெற்றது.
ஆழியவளை பகுதியில் குறித்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு பொருத்தமான இடம் இல்லாததுடன், ஆழியவளை மற்றும் வெற்றிலைக்கேணி பகுதிகளின் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படும் என தெரிவித்து, அப்பகுதி மக்கள் குறித்த திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்திருந்தனர்.
இதனையடுத்து, ஆழியவளை பகுதியில் இந்திய முதலீட்டுத் திட்டத்திற்காக காணி வழங்குவதில்லை எனவும், குறித்த திட்டத்தை நாகர்கோவில் கிராமத்திற்கு மாற்றுவது எனவும் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
மேலும், அவசர வெளியேற்றப் பாதைகளின் புனரமைப்பு பணிகளை துரிதப்படுத்துவது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.
அத்துடன், டீத்வா புயலினால் பாதிக்கப்பட்ட வீதிகளை புனரமைப்பது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது.
வனஜீவராசிகள் திணைக்களத்தினால் கையகப்படுத்தப்பட்டுள்ள காணிகளை விடுவிக்க வேண்டும் என பொதுமக்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளும் கூட்டத்தில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.
இதன்போது, குறித்த காணிகள் தொடர்பான நடவடிக்கைகளை வனஜீவராசிகள் திணைக்களம் துரிதப்படுத்த வேண்டும் எனவும் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.