அரசாங்கத்தின் அதிகார மோகத்தை தோற்கடிக்க வேண்டும்
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் அதிகார மோகத்தை முறியடித்து, 22ஆவது அரசமைப்புத் திருத்தத்தை வீழ்த்தி, உயரிய நீதிமன்றத்தைப் பாதுகாத்து நிலைநிறுத்தவே ஐக்கிய மக்கள் சக்தியும் ஐக்கிய மக்கள் கூட்டணியும் வீதிக்கு இறங்கியுள்ளன என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
22ஆவது திருத்தத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஐக்கிய மக்கள் சக்தி கொழும்பு கோட்டை ரயில் நிலையம் முன்பாக இன்று நடத்திய கண்டனப் பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் உரையாற்றுகையில்,
“22ஆவது திருத்தத்தின் ஊடாக அதிகார மோகத்துடன் செயற்படும் தேசிய மக்கள் சக்தி அரசு, நாட்டின் ஜனநாயகத்தையும், சட்டத்தின் ஆட்சியையும் சீரழித்து நீதித்துறையை நாசப்படுத்தும் வேலைகளில் ஈடுபட்டு வருகின்றது. இத்தகைய தனிக்கட்சி ஆட்சி முறைமையை ஜனநாயக வழியில் தோற்கடிக்கத் தேவையான அனைத்தையும் செய்வோம்.
நாட்டில் வறுமை அதிகரித்து, பொருள்களின் விலைகள் கூடி, வேலையின்மையும் அதிகரித்துள்ளது.
‘200 ஆடைத் தொழிற்சாலைகள்’ திட்டமும் செயலிழந்து தொழிற்சாலைகள் மூடப்பட்டு வருகின்றன. வறுமையை ஒழிக்க அரசிடம் எந்தத் தீர்வும் இல்லை.
ஜனாதிபதி விவசாயியின் மகனாக இருந்தால் நெல்லுக்கான நிலையான விலையைப் பெற்றுக்கொடுத்து மக்களின் வாழ்வுரிமையைப் பாதுகாக்க வேண்டும்.
நாடாளுமன்றத்தில் பெரும்பான்மைப் பலம் காணப்படுவதால் வெற்றிபெறலாம் என்று அரசு கருதுகின்றது.
வலுசக்தி அமைச்சருக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணையில் ஐக்கிய மக்கள் சக்தி தோல்வியடைந்தாலும், இறுதியில் அமைச்சருக்கும் செயலாளருக்கும் வீட்டுக்குச் செல்ல நேர்ந்தது போன்றே இந்தத் துர்ப்பாக்கியமான ஆட்சியையும் ஒருநாள் தோற்கடிப்போம்.
இலங்கை நீதித்துறை தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தி எப்போதுமே சரியான நிலைப்பாட்டிலும் இடத்திலுமே இருந்தது.
முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவின் பிரச்சினை முதல் கடந்த காலங்களில் நீதிபதிகள் விவகாரங்களை எதிர்த்தது வரை நாங்களே குரல் கொடுத்தோம்.
17, 18, 19, 20 மற்றும் 21ஆம் திருத்தங்களுக்குக் கைகளை உயர்த்தியவர்கள் யாரும் எமது கட்சியில் இல்லை.” – என்றார்.
