ஆட்சிகள் மாறினாலும் ஊடகர்கள் மீதான அச்சுறுத்தல்கள் நீங்காமல் தொடர்கின்றன.!
செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பில் செய்தி சேகரிக்கச் சென்றமைக்காக அரச ஊடகம் ஒன்றில் பணியாற்றிய யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர் பணியிலிருந்து நிறுத்தப்பட்டுள்ளமை, காலத்துக்குக் காலம் ஊடகவியலாளர்கள் மீதான நெருக்கடிகள் எவ்வாறெல்லாம் தொடர்கின்றன என்பதைப் புலப்படுத்துகின்றன என்று முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் பா.கஜதீபன் தெரிவித்தார்.
மறைந்த இளம் ஊடகவியலாளர் ஞானப்பிரகாசம் பிரகாசின் 5ஆம் ஆண்டு நினைவு தினமானது யாழ். ஊடக அமையத்தில் நேற்றுப் புதன்கிழமை நடைபெற்ற நிலையில், அதில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“மறைந்த ஊடகவியலாளர் ஞானப்பிரகாசம் பிரகாஷ் உடல்நலக் குறைபாடுகளுக்கு மத்தியிலும் தனது இனத்தின் வலிகளை நீக்குவதற்காகத் தன்னால் முடிந்தளவு உழைத்தவர்.
ஊடகவியலாளர்களின் நினைவு தினங்களின்போது அவர்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகளைச் சுட்டிக்காட்டுவது பொருத்தமானதாகும்.
நெருக்கடிகள் அனைத்துக்கும் தீர்வு தருவதாகக் கூறி ஆட்சிக்கு வந்த தேசிய மக்கள் சக்தியினர், தற்போது முன்னைய காலங்களை விட நெருக்கடி மிகுந்த சூழ்நிலைக்குள் ஊடகவியலாளர்களைத் தள்ளியுள்ளனர்.
செம்மணி மனிதப் புதைகுழி விவகாரத்தில் செய்தி சேகரிக்கச் சென்றமைக்காக அரச ஊடகத்தில் பணியாற்றிய யாழ். ஊடகவியலாளர் பிரபாகரன் டிலக்சன் பணியிலிருந்து நிறுத்தப்பட்டிருக்கின்றமை இதற்குச் சான்றாகும்.
தமிழ் மக்கள் மீதான அடக்குமுறைகள் தொடர்ந்து கொண்டிருப்பது போன்று, அந்த அடக்குமுறைகளை வெளிப்படுத்தும் ஊடகவியலாளர்கள் மீதான அச்சுறுத்தல்களும் ஆட்சிகள் மாறினாலும் தொடர்கதையாகவே உள்ளன.” – என்றார்.