மிதக்கும் விளையாட்டு கிராமம்
ஜப்பானில் நடைபெறவுள்ள 20ஆவது ஆசிய விளையாட்டு போட்டியில் பங்கேற்கும் வீரர்கள் மற்றும் அதிகாரிகளுக்காக ‘கோஸ்டா செரீனா’ என்ற பிரமாண்ட சொகுசுக் கப்பல் மிதக்கும் விளையாட்டு கிராமமாக பயன்படுத்தப்படவுள்ளது.
எதிர்வரும் 19ஆம் திகதி முதல் அடுத்த மாதம் 4ஆம் திகதி வரை அய்ச்சி மற்றும் நகோயா நகரங்களில் நடைபெறும் இப்போட்டியில் 46 நாடுகளைச் சேர்ந்த சுமார் 17,000 வீரர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர்.
வழக்கமாக வீரர்களுக்காக தனியான விளையாட்டு கிராமம் அமைக்கப்படும் நிலையில், கட்டுமானச் செலவுகள் அதிகரித்துள்ளதால் இம்முறை குடியிருப்புகள் அமைக்கும் திட்டத்தை ஜப்பான் கைவிட்டுள்ளது.
இதற்குப் பதிலாக 14 தளங்களைக் கொண்ட ‘கோஸ்டா செரீனா’ சொகுசுக் கப்பல் நகோயா துறைமுகத்தில் நிறுத்தப்பட்டு, விளையாட்டு கிராமமாக பயன்படுத்தப்படவுள்ளது. கப்பலில் நூற்றுக்கணக்கான அறைகள், உணவகங்கள், நீச்சல் குளங்கள் மற்றும் பொழுதுபோக்கு வசதிகள் உள்ளன.
சுமார் 4,000 முதல் 5,000 வீரர்கள் இந்தக் கப்பலில் தங்கவைக்கப்படவுள்ளனர். குறிப்பாக நகோயா துறைமுகத்தை அண்மித்த பகுதிகளில் நடைபெறும் 20 வகையான போட்டிகளில் பங்கேற்கும் வீரர்களுக்கு இங்கு தங்குமிடம் வழங்கப்படவுள்ளது.
மற்ற வீரர்கள் தற்காலிக குடியிருப்புகள், விடுதிகள் மற்றும் அருகிலுள்ள விடுதிகளில் தங்கவைக்கப்படவுள்ளனர்.