இன்னும் இரண்டு வாரங்களில் மின் தடை ஏற்படும் அபாயம்! – நாடாளுமன்றில் மொட்டுக் கட் சி எச்சரிக்கை.!
இலங்கையில் நிலவும் டீசல் தட்டுப்பாடு மற்றும் நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் பின்னடைவு காரணமாக, இன்னும் ஓரிரு வாரங்களில் மீண்டும் மின்சாரத் தடையை அமல்படுத்த வேண்டிய நிலை உருவாகலாம் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் டி.வி. சானக்க எச்சரித்துள்ளார்.
இன்றைய நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றிய அவர், நாட்டின் எரிபொருள் கையிருப்பு குறித்து கவலை வெளியிட்டார்.
அவர் மேலும் கூறியதாவது:எதிர்வரும் ஏப்ரல் 12 ஆம் திகதியளவில் நாட்டில் டீசல் இருப்பு தீர்ந்துவிடும் அபாயம் நிலவுகிறது. தற்போது வருகை தரும் எரிபொருள் கப்பல்களில் பெரும்பாலும் பெற்றோல் மட்டுமே உள்ளதாகவும், மின்சார உற்பத்தியில் டீசல் முக்கிய பங்கு வகிப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
மின்சார உற்பத்தி நடைமுறைகளின்படிமுதலில் குறைந்த செலவுடைய நீர்மின், சூரிய மற்றும் காற்றாலை மின்சாரங்கள் பயன்படுத்தப்பட வேண்டும். அதன் பின்னரே நிலக்கரி மற்றும் டீசல் மின்சாரம் பயன்படுத்தப்பட வேண்டும். எனினும், தற்போதைய தொழில்நுட்ப கோளாறுகள் காரணமாக டீசலின் மீது அதிகமாகச் சார்ந்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
மேலும், நுரைச்சோலை மின் நிலையத்தில் தரமற்ற நிலக்கரி பயன்படுத்தப்படுவதால் சுமார் 150 மெகாவாட் மின்சாரம் குறைவடைந்துள்ளதாகவும், முழு திறனான 810 மெகாவாட் மின்சாரம் கிடைத்திருந்தால் டீசல் தேவையே இல்லாத நிலை ஏற்பட்டிருக்கும் என்றும் குறிப்பிட்டார்.
இந்த குறைபாட்டை ஈடுகட்ட வாரத்திற்கு சுமார் 35 இலட்சம் லீற்றர் டீசலும், மாதத்திற்கு 140 இலட்சம் லீற்றர் டீசலும் கூடுதலாக பயன்படுத்தப்படுவதாகவும் அவர் விளக்கமளித்தார்.மின்சார சபையின் அறிக்கைகளை மேற்கோள் காட்டிய அவர், தற்போதைய நிலை தொடர்ந்தால் இன்னும் ஒரு அல்லது இரண்டு வாரங்களுக்குள் நாடு மீண்டும் மின்வெட்டு நிலைக்கு தள்ளப்படலாம் என்றும் எச்சரித்தார்