சூடான் போரை முடிவுக்குக் கொண்டுவர ஐக்கிய அரபு அமீரகத்தைக் கட்டுப்படுத்த வேண்டும்!
சூடானில் நீடித்து வரும் உள்நாட்டுப் போரை முடிவுக்கு கொண்டுவரும் முயற்சியின் ஒரு பகுதியாக, ஐக்கிய அரபு அமீரகத்தின் மீது அழுத்தம் செலுத்தி அதன் நடவடிக்கைகளை கட்டுப்படுத்துமாறு பிரித்தானிய அரசிடம் சூடானின் பிரித்தானியாவுக்கான தூதர் கோரிக்கை விடுத்துள்ளார்.
சூடானில் அரசுப் படைகளுக்கும் துணை இராணுவப் படையான ரேபிட் சப்போர்ட் போர்சஸ் (RSF) அமைப்புக்கும் இடையிலான மோதல் நான்காவது ஆண்டை எட்டியுள்ளது. இந்த மோதலில் பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளதுடன், சுமார் 1.3 கோடி மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பல பகுதிகளில் கடுமையான உணவுப் பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளது.
RSF அமைப்புக்கு ஐக்கிய அரபு அமீரகம் ஆயுதங்கள் மற்றும் நிதியுதவி வழங்கி வருவதாக சூடான் அரசாங்கம் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகிறது. இதன் மூலம் போர் நீடிப்பதாகவும், பொதுமக்கள் மீதான தாக்குதல்கள் அதிகரிப்பதாகவும் சூடான் தரப்பு தெரிவிக்கிறது. இந்தக் குற்றச்சாட்டுகளை ஐக்கிய அரபு அமீரகம் தொடர்ந்து மறுத்து வருகிறது.
இந்நிலையில், பிரித்தானியாவுக்கு முக்கியமான இராஜதந்திர மற்றும் பொருளாதார உறவுகள் கொண்ட நாடான ஐக்கிய அரபு அமீரகத்தின் மீது லண்டன் தனது செல்வாக்கைப் பயன்படுத்த வேண்டும் என சூடான் தூதர் வலியுறுத்தியுள்ளார்.
இதனிடையே, சூடான் போரில் வெளிநாடுகளின் இராணுவ மற்றும் நிதியுதவி மோதலை மேலும் தீவிரப்படுத்துவதாக அமெரிக்காவும் எச்சரித்துள்ளது. அனைத்து தரப்புகளுக்கும் வழங்கப்படும் வெளிப்புற ஆதரவை நிறுத்தி, ஆயுதத் தடையை நாடு முழுவதும் விரிவுபடுத்தும் முயற்சிகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.