ஈரானில் ஒரு அமெரிக்க டொலரின் மதிப்பு 20 இலட்சம் ரியால்களைக் கடந்துள்ளது!
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் பொருளாதாரத் தடைகள் மற்றும் போரினால் ஈரானிய நாணயத்தின் மதிப்பு வரலாறு காணாத வகையில் வீழ்ச்சியடைந்துள்ளது.
இதன் காரணமாக, திறந்த சந்தையில் ஒரு அமெரிக்க டொலரின் மதிப்பு 20 இலட்சம் ரியால்களைக் கடந்துள்ளது.
ஈரானில் தசாப்தங்களாக நீடிக்கும் சர்வதேச தடைகள் மற்றும் கடந்த பெப்ரவரி 28 அன்று ஆரம்பித்த அமெரிக்க-இஸ்ரேல் போர் ஆகியவை 9.2 கோடிக்கும் அதிகமான மக்களின் பொருளாதார வாழ்வை மிகக் கடுமையாகப் பாதித்துள்ளன.
உணவுப் பொருட்கள், ஆடைகள் மற்றும் மருந்துகளின் விலைகள் விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளதால், பொதுமக்கள் அத்தியாவசியத் தேவைகளுக்கே திண்டாடி வருகின்றனர்.
போருக்கு முன்னர், ஒரு டொலருக்கு அதாவது 20 இலட்சம் ரியால்களைக் கொண்டு சுமார் 4 கிலோ தக்காளி, அரை கிலோ கோழி இறைச்சி மற்றும் ஒரு லீற்றருக்கும் குறைவான சமையல் எண்ணெய் ஆகியவற்றைக் கொள்வனவு செய்யக்கூடியதாக இருந்தது.
எனினும், தற்போது அதே தொகையில் பாதியளவான பொருட்களையே கொள்வனவு செய்ய முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, தக்காளியின் விலை 71 சதவீதத்தாலும், கோழி இறைச்சியின் விலை 74 சதவீதத்தாலும், சமையல் எண்ணெய் 177 சதவீதத்தாலும் உயர்ந்துள்ளன.
நீரிழிவு நோயாளிகளுக்கான இன்சுலின் விலை 642 சதவீதத்தாலும், பரசிட்டமோல் போன்ற அவசியமான மருந்துகள் 93 சதவீதத்தாலும், குழந்தைகளுக்கான பால்மா 95 சதவீதமும் அதிகரித்துள்ளன.
இந்தநிலையில், மாதத்தின் இறுதி வரை தங்களது வருமானத்தைக் கொண்டு சமாளிப்பதே தற்போதைய மிகப்பெரிய சவாலாக உள்ளதாக ஈரானிய மக்கள் தெரிவித்துள்ளனர்.
ஈரானிய அரசின் குறைந்தபட்ச மாத வேதனம் சுமார் 16.6 கோடி ரியால்கள் முதல் 22 கோடி ரியால்கள் வரை உள்ள நிலையில், அன்றாடச் செலவுகளும் மருந்து மாத்திரைகளின் விலைகளும் அதைவிடப் பல மடங்கு அதிகரித்துள்ளன.
உற்பத்தி முடக்கம், துறைமுகங்கள் மீதான கடற்படை முற்றுகை மற்றும் வேலையின்மை போன்ற காரணங்களால் ஈரானியக் குடும்பங்களின் கொள்வனவுத் திறன் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.