TIN இலக்க நடைமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு.!
குறிப்பிட்ட எட்டு வகையான பரிவர்த்தனைகளுக்கு வரி செலுத்துவோர் அடையாள இலக்க (TIN) சான்றிதழை கட்டாயமாகச் சமர்ப்பிக்க வேண்டிய நடைமுறையை 2027 ஏப்ரல் 01ஆம் திகதி வரை ஒத்திவைத்துள்ளதாக இலங்கையின் உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அறிவித்துள்ளது.
இந்த நடைமுறை 2026 நவம்பர் 01ஆம் திகதி முதல் அமுலுக்கு வரவிருந்த நிலையில், பொதுமக்களிடையே TIN சான்றிதழைப் பெற்றுக்கொள்வதற்கான கேள்வி அதிகரித்துள்ளதால் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
நிதி அமைச்சின் அனுமதியுடன் இந்த ஒத்திவைப்பு அறிவிக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், இதுவரை TIN இலக்கத்தைப் பெற்றுக்கொள்ளாதவர்கள் இணையவழி e-Services தளத்தின் ஊடாகப் பதிவு செய்துகொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், ஏற்கனவே TIN இலக்கத்தைப் பெற்றுள்ளவர்கள் தமது சான்றிதழ்களை இலகுவாகப் பெற்றுக்கொள்ள மாற்று வசதிகளை அறிமுகப்படுத்தவும் திணைக்களம் திட்டமிட்டுள்ளது.
முக்கியமாக, இந்த நடைமுறை இரத்துச் செய்யப்படவில்லை. 2027 ஏப்ரல் 01ஆம் திகதி முதல் கட்டாயமாக அமுலுக்கு வரும் என IRD வலியுறுத்தியுள்ளது.


