ஈரானில் பாடசாலை மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்குப் பின்னால் அமெரிக்கா : போர்க் குற்றம் என ஐ.நா. சாடல்!
ஈரானில் கடந்த பெப்ரவரி மாதம் பாடசலை ஒன்றின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் உட்பட இரண்டு தாக்குதல்களுக்குப் பின்னால் அமெரிக்கா இருந்ததாக நம்புவதற்குப் “போதுமான ஆதாரங்கள்” உள்ளன.
அத்துடன் அவை போர்க் குற்றங்கள் என ஐக்கிய நாடுகள் சபையின் உண்மையை கண்டறியும் குழு தெரிவித்துள்ளது.
ஈரானின் மினாப் நகரில் உள்ள ‘ஷாஜரே தயெபே’ (Shajareh Tayyebeh) ஆரம்பப் பாடசாலையின் மீது,கடந்த பெப்ரவரி மாதம் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் 120 பள்ளி மாணவர்கள் உட்பட 150க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.
இது ஒரு தெளிவான பொதுமக்கள் கட்டடம் என்றும், இராணுவ நோக்கத்திற்காகப் பயன்படுத்தப்படவில்லை என்றும் ஐக்கிய நாடுகள் நிபுணர்கள் தமது கண்டறிதலில் உறுதிப்படுத்தியுள்ளனர்.
பழமையான அல்லது புதுப்பிக்கப்படாத இலக்குத் தரவுகளை (Outdated targeting data) அமெரிக்கப் படைகள் பயன்படுத்தியதே இந்தப் பேரழிவிற்கு முக்கியக் காரணம் என ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேபோன்று லாமெர்ட் நகரில் உள்ள ஒரு விளையாட்டு அரங்கம் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்தத் தாக்குதலில் அருகில் இருந்த குடியிருப்புப் பகுதிகள் மற்றும் பாடசாலைகள் சேதமடைந்ததுடன், 22 குடிமக்கள் உயிரிழந்தனர் அல்லது காயமடைந்தனர்.
இந்தநிலையில், இந்த இரண்டு தாக்குதல்களும் கண்மூடித்தனமானவை என்றும், சர்வதேச மனிதநேய சட்டங்களின்படி இவை போர்க் குற்றங்கள் (War Crimes) என்றும் ஐக்கிய நாடுகளின் சுதந்திரமான சர்வதேச உண்மை கண்டறியும் குழு தெரிவித்துள்ளது.
இதேவேளை, போராட்டங்களின் போது ஈரானியக் காவல்துறை மற்றும் அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட கடுமையான அடக்குமுறைகள், தன்னிச்சையான கைதுகள் மற்றும் மனித உரிமை மீறல்களையும் ஐக்கிய நாடுகள் குழு தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.