கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த இந்திய கடற்படையின் ‘INS UDAYGIRI’ போர்க்கப்பல்.!
இந்திய கடற்படைக்குச் சொந்தமான ‘INS UDAYGIRI’ போர்க்கப்பல் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இன்று (2026 செப்டம்பர் 08) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
துறைமுகத்தை வந்தடைந்த கப்பலை, கடற்படை மரபுகளுக்கு அமைவாக இலங்கை கடற்படையினர் சிறப்பான முறையில் வரவேற்றனர்.
149.02 மீட்டர் நீளம் கொண்ட ‘Frigate’ வகையைச் சேர்ந்த இப்போர்க்கப்பலின் கட்டளை அதிகாரியான கெப்டன் விகாஸ் சூட் (Captain Vikas Sood) மற்றும் மேற்கு கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் ஹர்ஷ த சில்வா ஆகியோருக்கு இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு கடற்படைத் தலைமையகத்தில் நடைபெற்றது.
இதில் பங்குபற்றிய கெப்டன் விகாஸ் சூட், கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூலை முதல் 2023 ஆம் ஆண்டு ஒக்டோபர் வரை இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகராகக் கடமையாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்போர்க்கப்பல் இலங்கையில் தங்கியிருக்கும் காலப்பகுதியில், இருநாட்டு கடற்படைகளுக்கும் இடையிலான நல்லுறவை மேம்படுத்தும் வகையில் இலங்கை கடற்படையினரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பல்வேறு நிகழ்ச்சிகளில் அதன் அங்கத்தவர்கள் பங்கேற்கவுள்ளனர். அத்துடன், நாட்டின் முக்கிய இடங்களைப் பார்வையிடுவதற்காக அவர்கள் நாட்டின் பல பகுதிகளுக்கும் விஜயம் செய்யவுள்ளனர்.
மேலும், இப்போர்க்கப்பலின் செயல்பாடுகளைப் பார்வையிடுவதற்கும், தொழில்முறை அறிவைப் பரிமாறிக்கொள்வதற்கும் இலங்கை கடற்படை வீரர்களுக்கு வாய்ப்பளிக்கப்படவுள்ளதுடன், இலங்கை கடற்படையினரால் கப்பலினுள் சிறப்புப் பயிற்சித் திட்டங்களை நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.






