மாணவி கிருசாந்தியின் 30ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு.!
யாழ்ப்பாணம், செம்மணிப் பகுதியில் படுகொலை செய்யப்பட்ட சுண்டிக்குளி மகளிர் கல்லூரி மாணவியான கிருசாந்தி குமாரசாமி உள்ளிட்டோரின் 30ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நேற்று மாலை செம்மணிப் பகுதியில் உணர்வுபூர்வமாக இடம்பெற்றது.
இதன்போது செம்மணிப் பகுதியில் படுகொலை செய்யப்பட்டு அங்கு புதைக்கப்பட்ட ஏனையோரும் நினைவுகூரப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.
கடந்த 1996ஆம் ஆண்டு செப்டம்பர் 7ஆம் திகதி, 18 வயதுடைய சுண்டிக்குளி மகளிர் கல்லூரி மாணவி கிருசாந்தி சைக்கிளில் சென்றுகொண்டிருந்தபோது, செம்மணிப் பகுதியில் இராணுவத்தினரால் வழிமறிக்கப்பட்டுப் பாலியல் வன்கொடுமைக்குட்படுத்தப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டார்.
கிருசாந்தி செம்மணி இராணுவ முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்தமையைப் பிரதேச மக்கள் அவதானித்து மாணவியின் தாயாரிடம் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, மாணவியின் தாயார் இராசம்மா குமாரசாமி, மாணவியின் சகோதரன் குமாரசாமி பிரணவன் மற்றும் அயல் வீட்டில் வசிக்கும் தென்மராட்சி பலநோக்கு கூட்டுறவுச் சங்க உதவியாளர் சிதம்பரம் கிருபாமூர்த்தி ஆகியோர் மாணவியைத் தேடிச் சென்று செம்மணி இராணுவ முகாமில் விசாரித்துள்ளனர்.
அங்கு மாணவியைத் தேடிச் சென்ற அந்த மூவரையும் இராணுவத்தினர் கழுத்து நெரித்தும் வெட்டியும் படுகொலை செய்திருந்தனர்.
அன்றைய தினம் நள்ளிரவு கிருசாந்தி உட்பட படுகொலை செய்யப்பட்ட நால்வரின் உடல்களையும் செம்மணிப் பகுதியில் உள்ள வயல்வெளியில் இராணுவத்தினர் இரகசியமாகப் புதைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.




