இளைஞர்களுக்கான முறையான தேசிய கொள்கையை வகுப்பதே அரசின் முதன்மை நோக்கம்.!
இலங்கை வரலாற்றில் முதன்முறையாக இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சு நேரடி தலையீடு செய்து, இளைஞர் அபிவிருத்தி குறித்த தேசிய மாநாடு மற்றும் ஆராய்ச்சிப் பணிகளை ஏற்பாடு செய்துள்ளதாக இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார் கமகே தெரிவித்துள்ளார்.
நாட்டின் எந்தவொரு துறையிலும் உணர்திறன் மிக்க, அபிவிருத்தியடைந்த தேசியக் கொள்கைகள் இல்லாத நிலை காணப்படுவதாகவும், அரசாங்கம் என்ற ரீதியில் இளைஞர்களின் முன்னேற்றத்திற்காக பொறுப்புக்கூறக்கூடிய, அறிவியல் பூர்வமான கொள்கை ஒன்றை உருவாக்குவது அத்தியாவசியமானது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இன்றைய தினம் (08) கொழும்பிலுள்ள அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்தில் குறிப்பிட்ட வாக்குறுதிக்கு அமைவாகவே, இளைஞர் சமுதாயத்திற்கான புதிய தேசியக் கொள்கையை வகுக்கும் பணிகள் தற்போதைய அரசால் முறைப்படி ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இதன் முதற்கட்டமாக, இளைஞர்கள் எதிர்கொள்ளும் அனைத்துப் பிரச்சினைகளையும் உள்ளடக்கும் வகையில் 9 முக்கிய துறைகளின் கீழ் ஆராய்ச்சிப் பத்திரங்களை சமர்ப்பிப்பதற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
வெறுமனே கொள்கைகளை அறிவிக்காமல், பெறப்படும் இந்த ஆராய்ச்சிப் பத்திரங்களின் முடிவுகள் மற்றும் அறிவியல் பூர்வமான தரவுகளின் அடிப்படையிலேயே புதிய இளைஞர் கொள்கை தயாரிக்கப்படும் என குறிப்பிட்ட அமைச்சர், இளைஞர் சமுதாயத்தின் திறன்களை அடையாளம் கண்டு, நாட்டின் நிலையான அபிவிருத்தியில் அவர்களைப் பங்காளிகளாக்குவதே இந்தத் தேசிய மாநாட்டின் முதன்மை நோக்கம் என்றும் தெரிவித்தார்.