பல கோடி ரூபாய் பெறுமதியான போ*தைப்பொருட்கள் கடத்தல்.!
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சுமார் 5 கோடியே 13 இலட்சத்து 70 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான போதைப்பொருட்களை சட்டவிரோதமாக இலங்கைக்குள் கடத்த முயன்ற தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த இருவரை இலங்கை சுங்கப் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
தாய்லாந்தில் இறைச்சிக் கடையில் பணிபுரியும் 23 மற்றும் 39 வயதுடைய நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் இன்று அதிகாலை தாய்லாந்தின் பாங்காக் நகரிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தைச் வந்தடைந்துள்ளனர்.
இதன்போது, தாம் அறிவிப்பதற்கு எதுவுமில்லை என்பதைக் குறிக்கும் ‘பசுமைப் பாதை’ (Green Channel) வழியாகப் போதைப்பொருட்களைக் கடத்திச் செல்ல முயன்றபோது, சுங்க அதிகாரிகளால் சோதனையிடப்பட்டனர்.
அவர்களது பயணப் பைகளைச் பரிசோதித்தபோது, விட்டமின் அடங்கிய 16 கொள்கலன்களுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 4 கிலோ 496 கிராம் ‘குஷ்’ ரக போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும், திராட்சைப் பசை போன்று தோற்றமளிக்கும் வகையில் பொலித்தீன்களில் சுற்றப்பட்டிருந்த 641 கிராம் ‘ஹஷீஷ்’ ரக போதைப்பொருளையும் அதிகாரிகள் மீட்டெடுத்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களும் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களும் மேலதிக விசாரணைகளுக்காகவும் சட்ட நடவடிக்கைகளுக்காகவும் கட்டுநாயக்க விமான நிலையப் போதைப்பொருள் தடுப்புப் பணியக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
