மட்டக்களப்பு, மண்முனை தெற்கு எருவில் பற்று பிரதேச செயலகத்தின் ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்!
மட்டக்களப்பு ,மண்முனை தெற்கு எருவில் பற்று (களுவாஞ்சிகுடி) பிரதேச செயலகத்தின் ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் இன்று களுவாஞ்சிகுடி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
மண்முனை தெற்கு எருவில் பற்று (களுவாஞ்சிகுடி) பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளர் யு.உதயஸ்ரீதரின் ஏற்பாட்டில் பிரதேச அபிவிருத்திக்குழுவின் தலைவரும் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கந்தசாமி பிரபு தலைமையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான இரா.சாணக்கியன்,ஞா.சிறிநேசன்,டாக்டர் இ.சிறிநாத், மண்முனை தெற்கு எருவில் பற்று பிரதேசசபையின் தவிசாளர் எம்.வினோராஜ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இந்த கூட்டத்தில் திணைக்களங்களின் தலைவர்கள்,பாதுகாப்பு துறையினர்,பிரதேசசபை உறுப்பினர்கள்,பிரதேச செயலக உத்தியோகத்தர்கள்,பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் என பலர் கலந்துகொண்டனர்.
இக்கூட்டத்தில் பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு அபிவிருத்திப் பணிகள், நிலுவையில் உள்ள திட்டங்கள் மற்றும் பொதுமக்களின் அவசரப் பிரச்சினைகள் குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டு பல முக்கிய தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டன.
பிரதேசத்தில் 281 மில்லியனுக்கும் அதிகமான நிதி ஒதுக்கீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தித் திட்டங்கள் தற்போது 100வீதம் பூர்த்தியடையும் கட்டத்தை எட்டியுள்ளதாக இக்கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
அதேவேளை, இளைஞர்களைப் பாதிக்கும் போதைப்பொருள் பயன்பாடு மற்றும் அதிக வேகம் காரணமாக ஏற்படும் வீதி விபத்துகளைக் கட்டுப்படுத்த பொலிஸாருக்குத் தெளிவான வழிகாட்டல்கள் வழங்கப்பட்டுள்ளன. போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபடுபவர்களைக் கைது செய்யவும், விதிமுறைகளை மீறி அதிவேகமாகச் செல்லும் சாரதிகளுக்கு எதிராகத் தொடர்ச்சியான கண்காணிப்புகளை மேற்கொண்டு சட்ட நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
களுவாஞ்சிகடி வைத்தியசாலையின் கழிவகற்றல் 15 நாட்களுக்கும் மேலாக மேற்கொள்ளப்படவில்லை என்ற முறைப்பாடு தொடர்பில் பிரதேச சபைக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், வைத்தியசாலையின் செயற்கைக் கருத்தரிப்பு மையத்தின் செயல்பாடுகள் மந்தகதியில் இருப்பது குறித்தும், சேவைக்குரிய கொடுப்பனவுகள் வழங்கப்பட்டும் முறையான சேவைகள் கிடைக்கவில்லை என்பது குறித்தும் அனைத்துத் தரப்பினரையும் உள்ளடக்கி விரைவில் தனிக் கூட்டமொன்றைக் கூட்டித் தீர்வு காணத் தீர்மானிக்கப்பட்டது.
கைத்தொழில் திணைக்களத்திற்குச் சொந்தமான, பல வருடங்களாகப் பயன்படுத்தப்படாமல் கைவிடப்பட்டுள்ள கட்டடங்கள் மற்றும் உபகரணங்களை மீளமைத்து, பிரதேச இளைஞர், யுவதிகளுக்கு தொழிற்பயிற்சிகளை வழங்கி அவ்வளாகங்களை மீண்டும் இயங்க வைப்பதற்கான பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன. அதேபோன்று, மகிளூர் பிரதேசத்தில் முன்னெடுக்கப்படும் குடிநீர் திட்டத்தில் நிலவும் குறைபாடுகளைத் தீர்த்து, விநியோகத்தை விரிவுபடுத்த 2027 வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக மேலதிக நிதி ஒதுக்கீடுகளைப் பெற்றுத் தருவதென உறுதியளிக்கப்பட்டுள்ளது.
சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் நோக்கில், வெளிநாட்டுப் பறவைகள் வருகை தரும் ‘ஏத்தாள குளம்’ பகுதியைச் சிறந்த சுற்றுலாத் தளமாக மாற்றுவதற்கு இலங்கை சுற்றுலா அபிவிருத்தி சபையின் அனுமதி மற்றும் நிதியுதவியுடன் பணிகள் தொடங்கப்படவுள்ளன. அதேபோன்று, ‘தூய்மையான இலங்கை’ திட்டத்தின் கீழ் பொதுச் சந்தையில் கழிப்பறை வசதிகளை அமைப்பதற்கான நிதியும் அனுமதிக்கப்பட்டுள்ளது.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் ஊடாக வறுமையை ஒழித்து, நாட்டையும் மக்களின் வாழ்வாதாரத்தையும் வளமிக்கதாக மாற்றும் வேலைத்திட்டங்கள் இவ்வாறான பிரதேச மட்ட அபிவிருத்திகள் மூலம் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் என இந்த கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.







