சிவ பூஜையில் கரடி புகுந்தது போல் அர்ச்சுனா எம்.பியின் அட்டகாசம்.!
கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக் குழுக்கூட்டத்தில் குழப்பத்தை ஏற்படுத்திய நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் கேடுகெட்ட நடவடிக்கைகளுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் உறுதியளித்தார்.
நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற மாவட்ட அபிவிருத்திக் குழுக்கூட்டத்தின் போது ஏற்பட்ட குழப்பநிலை குறித்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
மிகவும் அமைதியான முறையில் நடைபெற்று வந்த கூட்டத்துக்குள், நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா திடீரென நுழைந்து குழப்பத்தை விளைவித்தார் என்று குறிப்பிட்ட அமைச்சர், “சிவபூஜையில் கரடி புகுந்தது போல், அவர் உள்ளே புகுந்து பைத்தியக்காரத்தனமாகச் செயற்பட்டு கூட்டத்தை இடைநிறுத்தச் செய்துவிட்டார்” என்றும் கடுமையாக விமர்சித்தார்.
நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா அனைத்துக் கூட்டங்களுக்கும் சென்று குழப்பங்களை விளைவித்து வருவதுடன், அரச அதிகாரிகள் மீது ஆதாரமற்ற அபாண்டமான குற்றச்சாட்டுகளைச் சுமத்தி வருகின்றார் என்றும் அமைச்சர் குற்றம் சாட்டினார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,
“அபிவிருத்திக் குழுக் கூட்டத்தைப் பயன்படுத்தி அதிகாரிகள் மீது அபாண்டமாகப் பழி சுமத்தக்கூடாது. இத்தகைய கீழ்த்தரமான செயற்பாடுகளால், அந்த அதிகாரிகள் சமூகத்தின் முன் தலைநிமிர்ந்து செல்ல முடியாத இக்கட்டான நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். இவ்வாறான கேடுகெட்ட நடவடிக்கைகளைத் தடுக்க வேண்டியதன் அவசியத்துக்கு தற்போதைய சம்பவமே சிறந்த சான்றாகும்.
கிளிநொச்சி மாவட்டத்தின் அபிவிருத்தி மற்றும் அதன் எதிர்கால இருப்பு குறித்து அரசு அதிக அவதானம் செலுத்தி வருகின்றது. எனவே, குழப்பமடைந்த அபிவிருத்திக் குழுக் கூட்டத்தை மீண்டும் விரைவில் கூட்டுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அடுத்த கூட்டத்தில் இது குறித்து உறுதியான மற்றும் கடுமையான முடிவுகள் எடுக்கப்படும்.” – என்றார்.