எரிபொருள் சிக்கனம்: அமைச்சுகளுக்கு ஜனாதிபதி கடும் பணிப்புரை.!
ஒவ்வொரு அமைச்சும் எரிபொருள் சிக்கனம் தொடர்பான நடைமுறைசார் திட்டங்களை உடனடியாகத் தயாரித்து, குறைந்தபட்ச வலுசக்தி நுகர்வை உறுதிப்படுத்தும் செயன்முறைகளை தரவுகளுடன் அறிக்கையாக சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
அத்தியாவசியப் பொருட்களின் விநியோகத்தை கண்காணிக்கும் விசேட குழுவுடன் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போது இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டது. மக்களுக்குத் தட்டுப்பாடின்றி நியாயமான விலையில் அத்தியாவசியப் பொருட்களை வழங்குவதே இக்குழுவின் பிரதான நோக்கமாகும் என தெரிவிக்கப்பட்டது.
இதன்படி, விவசாயிகளுக்குத் தேவையான எரிபொருளை வழங்க விவசாய சங்கங்கள் ஒருங்கிணைக்கப்படுவதுடன், கைத்தொழிலாளர்களுக்கான எரிபொருள் விநியோகத்திற்கும் விசேட வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படஉள்ளது. ஹோட்டல்களுக்கு எரிவாயு மற்றும் எரிபொருள் வழங்குவதற்காக முன்னைய முறைமையைத் தொடர்ந்து பயன்படுத்தும் வாய்ப்பும் ஆராயப்பட்டுள்ளது.
மேலும், மீன்பிடி மற்றும் துறைமுக நடவடிக்கைகளுக்கான எரிபொருள் வழங்கல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், பொதுப் போக்குவரத்துத் தேவைகளை பூர்த்தி செய்யும் திட்டங்கள் மீளாய்வு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. சுகாதார சேவைகள் அத்தியாவசிய சேவையாகக் கருதப்பட்டு, வைத்தியசாலைகளுக்கான மருந்து மற்றும் உணவுப் பொருட்கள் போக்குவரத்துக்கு முன்னுரிமை வழங்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டது.
எரிபொருள் விலை உயர்வால் அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரிப்பதைத் தடுக்கும் மாற்று நடவடிக்கைகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டதுடன், அரச மற்றும் தனியார் விநியோகச் சங்கிலிகளை வலுப்படுத்தும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படுகின்றன.
நாட்டின் பொருளாதாரத்திற்கு ஏற்படும் பாதிப்புகளை குறைக்கும் வகையில், அனைத்து துறைகளிலும் குறைந்தபட்ச எரிபொருள் பயன்பாட்டுடன் இயல்பு வாழ்க்கையைத் தொடர தேவையான முழுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.