உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
27 வியாழன்

வடக்கில் மணல் மாபியாக்களின் கட்டுப்பாடற்ற செயற்பாடுகளால் மணல் விலை அதிகரிப்பு.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
26 பார்வைகள்

வடக்கு மாகாணத்தில் மணல் மற்றும் கிரவல் விலைகளைக் கட்டுப்படுத்தி ஒரே சீராகப் பேணுவதற்கும், மக்களின் தேவைக்கேற்ற விநியோகத்தை தடையின்றி வழங்குவதற்குமான புதிய பொறிமுறையொன்றை உருவாக்கும் நோக்கிலான விசேட உயர்மட்டக் கலந்துரையாடல், வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தலைமையில் இன்று செவ்வாய்க்கிழமை (10.03.2026) காலை ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது.

மணல் மற்றும் கிரவல் விநியோகத்தில் வடக்கு மாகாணத்தில் தற்போது எழுந்துள்ள சவால்கள் தொடர்பில் நேரில் ஆராய்ந்து தீர்வு காண்பதற்காக, ஆளுநரால் விடுக்கப்பட்ட விசேட அழைப்பை ஏற்று, புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகத்தின் தலைவர் சமன் ஜெயசிங்க இக்கலந்துரையாடலில் விசேடமாகப் பங்கேற்றிருந்தார்.

இக்கலந்துரையாடலின் ஆரம்பத்தில் கருத்துத் தெரிவித்த ஆளுநர் நா.வேதநாயகன்,
‘மணல் மாபியாக்களின் கட்டுப்பாடற்ற செயற்பாடுகளால் மாகாணத்தில் மணல் விலை மிகக் கடுமையாக அதிகரித்துச் செல்கின்றது. இந்த ஆண்டு வடக்கு மாகாணத்தில் பெருமளவிலான வீட்டுத் திட்டங்கள் மற்றும் அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன. இந்நிலையில், சாதாரண மக்கள் தங்களின் நாளாந்தத் தேவைகளுக்குக் கூட மணலைப் பெற்றுக்கொள்ள முடியாத துர்ப்பாக்கிய நிலை காணப்படுகின்றது.

இதனைக் கட்டுப்படுத்துவதற்குப் புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகத்தின் வடக்கு மாகாண அலுவலகத்திடமிருந்து போதிய ஒத்துழைப்புகள் கிடைக்கப்பெறவில்லை. திருகோணமலையிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு மணல் எடுத்து வருவதற்கான அனுமதிப்பத்திரத்தைப் பெற்றுக்கொண்டு, நடைமுறையில் கிளிநொச்சியிலிருந்து சட்டவிரோதமாக அகழப்படும் மணலையே அந்த அனுமதிப்பத்திரத்தைப் பயன்படுத்தி ஏற்றி வருகின்றனர்.

மேலும், அரச நிறுவனங்கள் ஊடாக மணல் விநியோகிப்பதற்கான அனுமதிப்பத்திரங்களுக்கு விண்ணப்பித்தால் அதற்குக் காலதாமதம் ஏற்படுகின்றது. ஆனால், தனிநபர்களுக்குப் பணியகத்தால் உடனடியாக அனுமதிகள் வழங்கப்படுகின்றன. இந்த நடைமுறைகள் முற்றாக மாற்றியமைக்கப்பட வேண்டும். மாவட்டச் செயலாளர்கள் தலைமையில் விசேட குழுக்களை அமைத்து, அக்குழுக்களின் ஊடாகவே இனி அனுமதிகளை வழங்கும் நடைமுறை உருவாக்கப்பட வேண்டும்,’ என ஆளுநர் மிகக் காட்டமாகக் கேட்டுக்கொண்டார்.

இதனைத் தொடர்ந்து உரையாற்றிய புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகத்தின் தலைவர் சமன் ஜெயசிங்க,
ஆளுநர் சுட்டிக்காட்டிய விடயங்களுடன் நான் முழுமையாக இணங்குகின்றேன். ஒருங்கிணைந்த திட்டமொன்றின் ஊடாகவே இப்பிரச்சினைக்குத் தீர்வு காண முடியும். மணல் மாபியாக்களால் ஏற்படுத்தப்படும் பிரச்சினைகளை நான் நன்கு அறிவேன். நேற்றைய தினம் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி வரும் வழியில், கிளிநொச்சி மாவட்டத்தில் பரந்தன் – பூநகரி வீதியில் கடல்நீரேரிக்கு அண்மையில் சட்டவிரோதமாக மணல் அகழ்வு நடைபெறுவதைக் கண்ணுற்றோம். நாம் அங்கு நேரடியாகச் சென்றபோது அவர்கள் தப்பித்து ஓடிவிட்டார்கள்.

ஆளுநரின் கோரிக்கைக்கு அமைய, உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் பொது அமைப்புகளுக்கு மாவட்டக் குழுக்களின் ஊடாக அனுமதிகளை வழங்குவதன் மூலம் மணல், கிரவல் விநியோகம் மற்றும் விலைகளைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரமுடியும். இலங்கையின் ஏனைய பகுதிகளிலும் இவ்வாறான நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றன. அத்துடன், எதிர்காலத்தில் எமது பணியகத்தின் செயற்பாடுகளை முழுமையாக டிஜிட்டல் மயமாக்கவுள்ளோம். 2027ஆம் ஆண்டிலிருந்து அனுமதிப்பத்திரங்களுக்கான விண்ணப்பங்கள் இணையவழியில் சமர்ப்பிக்கப்பட்டு, அனைத்து நடைமுறைகளும் வெளிப்படைத்தன்மையுடன் முன்னெடுக்கப்படும்,’ எனத் தெரிவித்தார்.

வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் புத்திக சிறிவர்தன கருத்துத் தெரிவிக்கையில்,
‘சட்டவிரோத மணல் கடத்தலைத் தடுப்பதற்கான தொடர் நடவடிக்கைகளைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். சுற்றிவளைப்புகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன. எனினும், பொலிஸாரால் மாத்திரம் இதனை முற்றுமுழுதாகக் கட்டுப்படுத்த முடியாது. மாவட்டக் குழுக்களின் ஊடாகப் பொது அமைப்புகளுக்கு அனுமதிகளை வழங்குவது மிகவும் காத்திரமான செயன்முறையாக அமையும்,’ என்றார்.

இதன்பின்னர் நடைபெற்ற திறந்த கலந்துரையாடலில், மாவட்டச் செயலாளர்களால் பல்வேறு முக்கிய விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டன. மணல் அகழ்வு, சேமிப்பு மற்றும் விநியோகம் ஆகிய மூன்று வகையான அனுமதிப்பத்திரங்களும் ஒரே நபர்களுக்கோ அல்லது ஒரே குடும்பத்துக்கோ வழங்கப்படுகின்றமையும், அனுமதிகள் வழங்கப்படுவது தொடர்பில் தமக்கு எவ்வித முன்னறிவிப்புகளும் செய்யப்படுவதில்லை எனவும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.

கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள 5 குளங்களில் மணலைக் கழுவி எடுத்து, அதனை உள்ளூராட்சி மன்றங்களின் ஊடாக விநியோகிப்பதற்கான பொறிமுறையொன்று முன்மொழியப்பட்டது. இதன்மூலம், யாழ்ப்பாணத்தில் ஒரு டிப்பர் மணலை சுமார் 60,000 ரூபாவுக்கு விற்பனை செய்ய முடியும் எனத் தெரிவிக்கப்பட்டது.

‘தூய இலங்கை’ செயலணியின் வடக்கு மாகாண இணைப்பாளரும், யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரின் இணைப்பாளருமான சு.கபிலன் கருத்துத் தெரிவிக்கையில்,
ஒவ்வொரு மாவட்டத்தினதும் உண்மையான மணல் தேவையைக் கணிப்பிடுவது அவசியம் எனவும், அதன் ஊடாகவே விநியோகத்தையும் விலையையும் சீராகப் பேண முடியும் எனவும் சுட்டிக்காட்டினார்.

பொதுமக்களின் சிறிய தேவைகளுக்கான மணலை, சீமெந்து விற்பனை போன்று உள்ளூராட்சி மன்றங்கள் ஊடாக விற்பனை செய்வதற்கான யோசனையும் முன்வைக்கப்பட்டது. உள்ளூராட்சி மன்றத்தில் பெற்றுக்கொண்ட பற்றுச்சீட்டுடன் அதனை எடுத்துச் செல்லும்போது பொலிஸாரால் எவ்வித இடையூறுகளும் ஏற்படாது எனவும் தெரிவிக்கப்பட்டது.

மாவட்டச் செயலாளர் தலைமையிலான விசேட மாவட்ட மட்டக் குழுவில், புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகம் உட்பட சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினரையும் உள்ளீர்த்தல். மணல் மற்றும் கிரவல் பெற்றுக்கொள்ளக்கூடிய இடங்களைக் கள ஆய்வு செய்து அடையாளப்படுத்துதல். விநியோகப் பணிகளைப் பதிவு செய்யப்பட்ட சங்கங்களின் ஊடாக மாத்திரம் முன்னெடுத்தல். இந்தப் புதிய பொறிமுறையின் தொடர் முன்னேற்றங்களை ஆராய்வதற்காக, மாகாண மட்டத்திலான மீளாய்வுக் கூட்டங்களை ஆண்டுக்கு இரண்டு தடவைகள் நடத்துதல் எனத் தீர்மானிக்கப்பட்டது.

இவ்விசேட கூட்டத்தில், வடக்கு மாகாண பிரதம செயலாளர், ஆளுநரின் செயலாளர், உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர், பிரதிப் பிரதம செயலாளர் (பொறியியல்), வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர், பிரதிப் பொலிஸ்மா அதிபர்கள், ஐந்து மாவட்டங்களின் செயலாளர்கள், உள்ளூராட்சி ஆணையாளர், நீர்ப்பாசன மற்றும் வீதி அபிவிருத்தித் திணைக்களங்களின் பணிப்பாளர்கள், மத்திய சுற்றாடல் அதிகார சபை, வனவளத் திணைக்களம், நிலஅளவைத் திணைக்களம் ஆகியவற்றின் உயர் அதிகாரிகள் மற்றும் கட்டட ஒப்பந்ததாரர் சங்கப் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

காணாமலாக்கப்பட்டவர்களின் தாய்மாரை பொலிஸாரால் எவ்வாறு பலவந்தமாக வெளியேற்ற முடிகிறது?

மௌனம் மற்றும் அக்கறையீனத்தின் ஊடாக தமது வலியை அவமதித்தமைக்காக ஒவ்வொரு அரசியல்வாதிக்கும், ஒவ்வொரு அரசாங்கத்துக்கும் எதிராகக் குரலெழுப்புவதற்கும், கோபம் கொள்வதற்குமான உரிமை மக்களுக்கு இருக்கிறது. பிள்ளைகளைப் பறித்துக்கொண்டதன்…

48 0 0
இலங்கை செய்திகள்

இரண்டு வாகனங்கள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து.!

ஹட்டன் கினிகத்தேன பிரதான வீதியில் இரண்டு வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. நேற்று மாலை வேளையில் தலைநகர் கொழும்பில் இருந்து ஹட்டன் நோக்கி வந்த பாரவூர்தியும்…

29 0 0
இலங்கை செய்திகள்

முஹம்மது நபி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்வு.!

இஸ்லாத்தின் ஆசான், முஹம்மது நபி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு ஹட்டன் ஜும்மா பள்ளிவாசலில் ஒரு சிறப்பு கொண்டாட்ட நிகழ்ச்சி நேற்று 26 ஆம் திகதி நடைபெற்றது. இந்தப்…

50 0 0
இலங்கை செய்திகள்

நீரில் மூழ்கி ஒருவர் உயிரிழப்பு.!

திக்வெல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பதிகம கடற்கரையில் நேற்று புதன்கிழமை (26) நீராடச் சென்ற நபரொருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் திக்வெல்ல பிரதேசத்தைச் சேர்ந்த…

45 0 0