காணாமலாக்கப்பட்டவர்களின் தாய்மாரை பொலிஸாரால் எவ்வாறு பலவந்தமாக வெளியேற்ற முடிகிறது?
மௌனம் மற்றும் அக்கறையீனத்தின் ஊடாக தமது வலியை அவமதித்தமைக்காக ஒவ்வொரு அரசியல்வாதிக்கும், ஒவ்வொரு அரசாங்கத்துக்கும் எதிராகக் குரலெழுப்புவதற்கும், கோபம் கொள்வதற்குமான உரிமை மக்களுக்கு இருக்கிறது. பிள்ளைகளைப் பறித்துக்கொண்டதன் பின்னர், அவர்களது தாய்மாரை ஒரு அரச கட்டடத்திலிருந்து பொலிஸாரால் எவ்வாறு பலவந்தமாக வெளியேற்ற முடிகிறது? என மனித உரிமைகள் மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
வலிந்து காணாமலாக்கப்படல்களால் பாதிக்கப்பட்டோருக்கான சர்வதேச தினத்தை முன்னிட்டு காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தினால் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை (25) யாழ். மாவட்ட செயலகத்தில் விசேட நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில், அதற்கு எதிர்ப்பை வெளிப்படுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் தாய்மார் பொலிஸாரினால் இழுத்துச் செல்லப்பட்டு மாவட்ட செயலகத்துக்கு வெளியே தள்ளிவிடப்பட்டனர்.
அதுமாத்திரமன்றி முகநூல் வாயிலாக ஒளிபரப்பப்பட்ட இந்தப் போராட்டக் காணொளியை நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்கார மாவட்ட செயலகத்துக்குள் இருந்தவாறு அவரது கையடக்கத் தொலைபேசியில் பார்வையிடும் புகைப்படமொன்றும் முகநூலில் பரவலாக பகிரப்பட்டு பலரதும் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது.
இந்நிலையில் இது குறித்து கண்டனம் வெளியிட்டுள்ள சிவில் சமூக செயற்பாட்டாளர் சுவஸ்திகா அருலிங்கம், ‘தமக்கான பதில்களைக் கோருவதற்கான உரிமை மக்களுக்கு இருக்கிறது. தமது அன்புக்குரியவர்களுக்கு என்ன நேர்ந்தது என அரசாங்கத்திடம் கேட்பதற்கான உரிமை மக்களுக்கு இருக்கிறது.
காணாமல்போன தமது அன்புக்குரியவர்களைத் தேடிக்கொண்டிருக்கும் எந்தவொரு குடும்பத்துக்கும் காணாமல்போனோர் பற்றிய அலுவலகம் உரிய பதிலை வழங்கவில்லை.
மௌனம் மற்றும் அக்கறையீனத்தின் ஊடாக தமது வலியை அவமதித்தமைக்காக ஒவ்வொரு அரசியல்வாதிக்கும், ஒவ்வொரு அரசாங்கத்துக்கும் எதிராகக் குரலெழுப்புவதற்கும், கோபம் கொள்வதற்குமான உரிமை மக்களுக்கு இருக்கிறது.
பிள்ளைகளைப் பறித்துக்கொண்டதன் பின்னர், அவர்களது தாய்மாரை ஒரு அரச கட்டடத்திலிருந்து பொலிஸாரால் எவ்வாறு வெளியேற்ற முடிகிறது?’ எனக் கரிசனை வெளியிட்டுள்ளார்.
அதேவேளை இதுபற்றி தனது உத்தியோகபூர்வ எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவொன்றைச் செய்திருக்கும் மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையத்தின் ஆய்வாளர் சட்டத்தரணி பவானி பொன்சேக்கா,
‘தமிழ் தாய்மார் இன்னமும் துன்பப்பட்டுக்கொண்டு இருக்கிறார்கள். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அவர்களுக்கு செவிசாய்க்கிறாரா?’ எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
அதேபோன்று இச்சம்பவம் தொடர்பில் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள சிவில் செயற்பாட்டாளர் சுலோச்சனா பீரிஸ்,
தமது அன்புக்குரியவர்களுக்கு நீதிகோரிப் போராடும் தாய்மாரைப் பார்க்கும்போது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விளைவிப்பவர்களைப் போன்று தெரிகிறதா? எனக் கவலை வெளியிட்டுள்ளார்.