காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் மீது பொலிஸார் தாக்குதல் நடத்தியமைக்கு சுமந்திரன் கடும் கண்டனம்.!
யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் பொலிஸாரால் தாக்கப்பட்டமைக்கும், அமைச்சர்களின் பொறுப்பற்ற செயற்பாடுகளுக்கும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
காணாமல்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் ஏற்பாட்டில், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான சர்வதேச தினத்தை முன்னிட்டு யாழ். மாவட்ட செயலகத்தில் நேற்று நிகழ்வொன்று இடம்பெற்றது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் மாவட்ட செயலகத்துக்கு வெளியே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன்போது போராட்டத்தில் ஈடுபட்ட தாய்மார்களுடன் பொலிஸார் மூர்க்கத்தனமாக நடந்து கொண்டதுடன், அவர்களை மாவட்ட செயலகத்துக்கு வெளியே ஆடைகள் கழரும் நிலையிலும் இழுத்துத் தள்ளி அப்புறப்படுத்தினர்.
இந்த வன்முறையை கைபேசியினூடாக நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார உள்ளிருந்தவாறே அவதானித்தார் என்றும், போராட்டம் பற்றிச் செய்தி சேகரித்த ஊடகவியலாளர்களை அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் கடுமையாக வசைபாடினார் என்றும் செய்திகள் வெளியாயின.
இந்தச் சம்பவம் தொடர்பாகப் பலரும் தங்களின் கண்டனங்களை வெளிப்படுத்தி வரும் நிலையில், ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
“நேற்று யாழ். மாவட்ட செயலகத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களது உறவுகள் மற்றும் தாய்மார்களை இலங்கைப் பொலிஸார் மிக மோசமாகத் தாக்கி அப்புறப்படுத்தியதை மிக வன்மையாகக் கண்டிக்கின்றோம்.
அதேபோல், இந்த நிகழ்வுகளை உள்ளேயிருந்து தனது கைபேசியில் பார்த்து இரசித்துக் கொண்டிருந்த நீதி அமைச்சரின் செயற்பாட்டையும், இந்தச் சம்பவத்தை வெளிப்படுத்திய ஊடகவியலாளர்களைப் பொதுவெளியில் சபித்த அமைச்சர் சந்திரசேகரின் செயலையும் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.” – என்றுள்ளது.