சித்திரைப் புத்தாண்டில் மது பிரியர்களுக்கு ஆப்பு ..!மதுபானசாலைகளுக்குப் பூட்டு..!
சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு ஏப்ரல் 13ஆம் மற்றும் 14ஆம் திகதிகளில் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மதுபானசாலைகளையும் மூடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கலால் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளரும் பிரதி ஆணையாளருமான ஏ.ஏ. ரொஷான் பெரேரா விடுத்துள்ள விசேட அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசின் அனுமதியுடன் அமுல்படுத்தப்பட்டுள்ள இந்த உத்தரவின்படி, மதுபானம் விற்பனை செய்வதற்கான அனுமதிப்பத்திரம் பெற்றுள்ள அனைத்து நிறுவனங்களும் குறிப்பிட்ட இரண்டு தினங்களிலும் மூடப்பட்டிருக்க வேண்டும்.
இதன்படி, வெளிநாட்டு மதுபான விற்பனை நிலையங்கள், மதுபானசாலைகள், மதுபானம் விற்பனை செய்யப்படும் விருந்தகங்கள் மற்றும் உணவகங்கள் ஆகிய இடங்களுக்கு இந்த உத்தரவு பொருந்தும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த உத்தரவை மீறி புத்தாண்டு தினங்களில் எவரேனும் மதுபான விற்பனையில் ஈடுபட்டால், அவர்களுக்கு எதிராக கலால் திணைக்களச் சட்டத்தின் கீழ் மிகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.