மட்டக்களப்பில் ஏற்றுமதி அபிவிருத்திச் சபையின் பிராந்திய அலுவலகம் விரைவில்
ஏற்றுமதி அபிவிருத்திச் சபையின் பிராந்திய அலுவலகம் ஒன்றை மட்டக்களப்பு மாவட்டத்தில் விரைவில் திறப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும் அமைச்சருமான சுனில் ஹெந்துன்நெத்தி தெரிவித்துள்ளார்.
கிழக்கு மாகாணத்தில் வர்த்தகம், தொழில்துறை மற்றும் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட “மட்டக்களப்பு சர்வதேச வர்த்தகக் கண்காட்சி” நேற்று (01) மட்டக்களப்பு, கல்லடி சிவானந்தா தேசிய பாடசாலை மைதானத்தில் ஆரம்பமானது.
கிழக்கு மாகாணத்தில் மூன்றாவது தடவையாக நடைபெறும் இக்கண்காட்சி ஒக்டோபர் 1 முதல் 4ஆம் திகதி வரை நான்கு நாட்கள் நடைபெறுகிறது. மட்டக்களப்பு வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளனத்தின் முழுமையான ஆதரவுடன், அதன் தலைவர் தேசபந்து முத்துக்குமார் செல்வராசா தலைமையில் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஆரம்ப நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட அமைச்சர் சுனில் ஹெந்துன்நெத்தி கண்காட்சியை உத்தியோகபூர்வமாகத் திறந்து வைத்தார். நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான ஞா. சிறிநேசன், இ. சிறிநாத், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ். அருள்ராஜ், மட்டக்களப்பு மாநகர முதல்வர் சிவம்பாக்கியநாதன், பிரதி முதல்வர் வை. தினேஸ்குமார் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
உள்ளூர் வர்த்தகர்கள், தொழிலதிபர்கள், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் கண்காட்சியில் பங்கேற்றனர்.
இதன்போது உரையாற்றிய அமைச்சர், விவசாயிகள் மற்றும் தொழிலதிபர்கள் நவீன தொழில்நுட்பங்கள் மற்றும் உபகரணங்களைப் பெற்றுக்கொள்வதற்கும், ஏற்றுமதித் துறையில் ஈடுபட்டுள்ள முன்னணி தொழிலதிபர்களுடன் வர்த்தகத் தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்வதற்கும் இவ்வாறான கண்காட்சிகள் முக்கிய வாய்ப்பாக அமைகின்றன எனத் தெரிவித்தார்.
மேலும், ஏற்றுமதித் துறையை ஊக்குவிக்கும் நோக்கில் மட்டக்களப்பில் ஏற்றுமதி அபிவிருத்திச் சபையின் பிராந்திய அலுவலகத்தை அமைப்பதற்கான திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அத்துடன், புதிய வர்த்தக முயற்சியாளர்கள் மற்றும் விவசாயிகளுக்குத் தேவையான தொழில்நுட்ப ஆலோசனைகள் மற்றும் தரச் சான்றிதழ்களை வழங்கும் வகையில் கிழக்குப் பல்கலைக்கழகத்துடன் இணைந்து “இன்குபேஷன் சென்டர்” ஒன்றை அமைப்பதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
இதன் மூலம் தொழிலதிபர்கள் தரச் சான்றிதழ்களைப் பெறுவதற்காக கொழும்புக்குச் செல்ல வேண்டிய தேவை குறையும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும், புதிய தொழில் முயற்சிகளுக்குத் தேவையான இயந்திரங்கள் மற்றும் தொழில்நுட்பங்களை ஐரோப்பிய நாடுகளிலிருந்து இறக்குமதி செய்வதற்கான வசதிகளை ஏற்படுத்துவதுடன், விவசாயம் மற்றும் மீன்பிடித்துறையை அடிப்படையாகக் கொண்ட உற்பத்திகளை சர்வதேச சந்தைக்கு கொண்டு செல்வதற்கான வாய்ப்புகளையும் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறினார்.
கொழும்புக்கும் மட்டக்களப்புக்கும் இடையிலான இடைவெளியைக் குறைத்து, நாட்டின் அனைத்து பகுதிகளையும் சேர்ந்த தொழிலதிபர்களுக்கும் சமமான வாய்ப்புகளை வழங்குவதே அரசாங்கத்தின் நோக்கம் எனவும் அமைச்சர் சுனில் ஹெந்துன்நெத்தி தெரிவித்தார்.

