கிழக்கு பல்கலைக்கழகத்தின் 30ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா
கிழக்கு பல்கலைக்கழகத்தின் 30ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா இன்று (03) வெகுவிமரிசையாக நடைபெற்றது.
2026ஆம் ஆண்டுக்கான இந்தப் பட்டமளிப்பு விழா, மட்டக்களப்பு பிள்ளையாரடியில் அமைந்துள்ள பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான மற்றும் சுகாதாரப் பராமரிப்புப் பீட அரங்கில் நடைபெற்றது.
கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் பிரதீபன் அவர்களின் ஒழுங்கமைப்பில், பல்கலைக்கழக வேந்தரும் ஓய்வுநிலைப் பேராசிரியருமான சி. மௌனகுரு தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவரும் சிரேஷ்ட பேராசிரியருமான கபில செனவிரத்ன பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.
இந்நிகழ்வில் கிழக்கு பல்கலைக்கழக திருகோணமலை வளாகப் பணிப்பாளர் பேராசிரியர் கலாநிதி சுந்தரேசன், விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவகத்தின் பணிப்பாளர் கலாநிதி பாரதி கெனடி உள்ளிட்ட பீடாதிபதிகள், பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் மற்றும் பல்கலைக்கழகப் பேரவை உறுப்பினர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.
தமிழர்களின் கலாசார மற்றும் பண்பாட்டு விழுமியங்களைப் பிரதிபலிக்கும் இசை அணியினரின் வரவேற்புடன் அதிதிகளும் மாணவர்களும் அழைத்துவரப்பட்டதைத் தொடர்ந்து விழா நிகழ்வுகள் ஆரம்பமாகின.
இதன்போது, கிழக்கு பல்கலைக்கழகத்தின் சுமார் 57 துறைகளில் பட்டப்படிப்பு மற்றும் பட்டமேற்படிப்புகளை நிறைவு செய்த 2,369 பேருக்குப் பட்டங்கள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர். அத்துடன், மருத்துவத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறப்புத் தகைமைகளைப் பெற்று தங்க விருதுகளுக்குத் தெரிவானவர்களும் கௌரவிக்கப்பட்டனர்.

