அரசுப் பணிகளின் தொடர்ச்சியை உறுதிப்படுத்தவே புதன் விடுமுறை – அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ விளக்கம்.!
அரசாங்க சேவைகள் நீண்டகாலத் தடங்கல் இல்லாமல் முன்னெடுக்கப்படுவதை உறுதி செய்யும் நோக்கில் புதன்கிழமை விசேட விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு அவர் கூறியதாவது, மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்ட மோதல் சூழலால் ஏற்பட்ட எரிபொருள் விநியோகச் சிக்கனத்தை கருத்தில் கொண்டு இந்த விடுமுறை வழங்கப்பட்டதாகும்.
அவர் மேலும் விளக்கமாக கூறியதாவது, சாதாரணமாக வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு விடுமுறைகள் தொடர்ச்சியாக வரும்போது அலுவலகப் பணிகள் சில நாட்களுக்கு பின்தங்கும் நிலை ஏற்படுகிறது. இதனால் பொதுமக்களுக்கு வழங்கப்படும் சேவைகளில் பிரச்சினைகள் உருவாகலாம்.
இதனைத் தவிர்க்க, வாரத்தின் நடுப்பகுதியில் உள்ள புதன்கிழமையிலான விடுமுறையால், அரசாங்க நடவடிக்கைகள் தடங்கல் இல்லாமல் திட்டமிட்டு முன்னெடுக்கப்பட முடியும். அதேவேளை, பொதுச் சேவைகள், அத்தியாவசிய பணிகள் முழு வாரமும் இயங்குவதை உறுதி செய்யும் வகையிலும் இது வழிவகை செய்யப்பட்டுள்ளது.