எரிபொருள், எரிவாயு விலை உயர்வு – மக்களை ஏமாற்றும் செயல் என திஸ்ஸ அத்தநாயக்க குற்றச்சாட்டு.!
மத்திய கிழக்கில் நிலவும் போர்நிலையை காரணமாகக் காட்டி அரசாங்கம் மேற்கொண்டுள்ள எரிபொருள் மற்றும் எரிவாயு விலை உயர்வு மக்களை ஏமாற்றும் கண்துடைப்புச் செயலாகும் என ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
இன்று வியாழக்கிழமை ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், நாட்டில் போதுமான எரிபொருள் கையிருப்பு இருப்பதாக சில வாரங்களுக்கு முன்புவரை கூறிய அரசாங்கம் தற்போது திடீரென விலையை உயர்த்தியுள்ளது .
நகைப்புக்குரியதாகும் என்றார். மேலும், எரிவாயு விலையை 300 ரூபாவால் அதிகரித்திருப்பது உணவகங்கள் முதல் சாதாரண வீட்டு தேவைகள் வரை அனைத்தையும் பாதிக்கும் என்றும், இதனால் உற்பத்தித் துறை மற்றும் மக்களின் வாழ்வுச் செலவு பாரியளவில் உயர்ந்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.
தேர்தலுக்கு முன்பு வழங்கிய வாக்குறுதிகள் இன்று கைவிடப்பட்டுள்ளதாகவும், துறைமுகத்தில் இறக்குமதி செய்யப்படும் விலையிலேயே எரிபொருளை வழங்குவோம் என்று கூறியவர்கள் தற்போது அதிகப்படியான வரிகளை நீக்கி மக்களுக்குநிவாரணம் வழங்கத் தவறிவிட்டனர் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை ஒரு பீப்பாய் 80 முதல் 85 டொலர் வரை இருக்கும் போதும் அதனை 100 டொலருக்கும் அதிகமாகக் கணக்கிட்டு அரசு மக்களை ஏமாற்றுவதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார். மின்சார சபையை ஆறு பகுதிகளாகப் பிரிக்கும் முயற்சி அதனை தனியார்மயமாக்கும் முதற்கட்டமாகும் என்றும், நிலக்கரி கொள்முதல் ஊழலால் ஏற்பட்ட நட்டத்தையும் மக்கள் மீது சுமத்தப்படுவதாகவும் தெரிவித்தார்.
மேலும், அரசின் நிர்வாகத் திறமையின்மை காரணமாக நாடு முழுவதும் மக்களிடையே கடும் அதிருப்தி நிலவுகின்றது என்றும், அரசு உண்மையிலேயே மக்களின் ஆதரவைப் பெற்றுள்ளதாக நம்பினால் உடனடியாக மாகாண சபைத் தேர்தலை நடத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.