டித்வா புயலினால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கான புதிய படகுகள் வழங்கும் நிகழ்வு.!
அநுர அரசாங்கம் இல்லையென்றால் டித்வா புயல் மற்றும் இன்று ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமைகளினால் என்ன நிலைமை ஏற்பட்டிருக்கும் என்பது மக்களுக்கு தெரியும். அரசியல்வாதிகள் இன்று குழம்பிய குட்டைக்குள் மீன்பிடிக்க முயற்சிப்பதாக கடற்தொழில் நீரியல்வளத்துறை அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.
டித்வா புயலினால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கான நஷ்ட ஈடு மற்றும் புதிய படகுகள் வழங்கும் நிகழ்வு இன்று மட்டக்களப்பு பழைய மாவட்ட செயலக மண்டபத்தில் நடைபெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கடற்றொழில் நீரியல்வளத்துறை அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் கலந்துகொண்டார்.
இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜ், தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர் வனிதா செல்லப்பெருமாள், கால்நடை மற்றும் காணி விவசாய அமைச்சின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் கே.திலகநாதன், சீனோ நிறுவனத்தின் பணிப்பாளர் அஜித் எதிரிசிங்க உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் 14 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் டித்வா புயலினால் பாதிக்கப்பட்ட 16 மீனவர் அமைப்புகளுக்கு இதன்போது சுமார் 2 கோடியே 69 இலட்சத்து 70 ஆயிரம் ரூபா நஷ்டஈடுகள் வழங்கப்பட்டதுடன் 12 மீனவர்களுக்கு புதிய மற்றும் திருத்தப்பட்ட படகுகள், இயந்திரப் படகுகள் அமைச்சரினால் வழங்கிவைக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் மீனவர் சங்க உறுப்பினர்கள், கடற்றொழில் நீரியல்வள திணைக்கள அதிகாரிகள், மீனவர்கள் என பல்வேறு தரப்பினரும் கலந்துகொண்டனர்.
கடந்த காலங்களில் சுனாமி அனர்த்தம், வெள்ள அனர்த்தங்களில் மக்களுக்கு நஷ்டஈடு வழங்காமல் அன்று அந்த பணங்களை அரசியல்வாதிகள் கொள்ளையிட்டனர். கடந்த காலங்களில் அரசியலுக்கு வந்தவர்கள் பலர் இன்று செல்வந்தர்களாக காணப்படுகின்றனர். அவர்களுக்கு இந்த பணம் எவ்வாறு வந்தது என்று மக்களுக்கு தெரியும். நாங்கள் சிறந்த அரசியலை முன்னெடுப்பதன் மூலமே இவ்வாறானவர்கள் எங்களை ஆட்சி செய்வதை தடுக்கமுடியும். சிறந்த அரசியலை முன்னெடுப்பதன் மூலமே மக்களின் அன்றாட பிரச்சினைகளை தீர்க்க முடியும். கடந்த காலத்தில் இடம்பெற்ற கொள்ளைகள் நிறுத்தப்பட்டதன் காரணமாகவே இன்று அந்த பணத்தினைக்கொண்டு மக்களுக்கான அபிவிருத்திகளை முன்கொண்டுசெல்ல முடிகின்றது.
இன்று வளைகுடாவில் ஏற்பட்டுள்ள போர் நெருக்கடிகள் இங்கும் தாக்கத்தினை செலுத்துகின்றது. எரிபொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளன. இந்த நெருக்கடி இலங்கைக்கு மட்டுமான நெருக்கடி அல்ல. உலக நாடுகளுக்கான நெருக்கடி. இந்த நாட்டில் ஒரு மாதத்திற்கான எரிபொருட்களையே சேமிக்க முடியும். நாங்கள் தற்போது மூன்று மாதத்திற்கான, ஆறு மாதங்களுக்கான எரிபொருட்களை சேகரித்து வைப்பதற்கான ஏற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றோம்.
ஆனால் இன்றைய நிலைமையினை வைத்து அரசியல்வாதிகள் குழம்பிய குட்டைக்குள் மீன்பிடிக்கும் செயற்பாட்டினை முன்னெடுத்து வருகின்றனர். இந்த நாட்டில் அநுரகுமார திசாநாயக்க என்பவர் ஆட்சியதிகாரத்தினை பொறுப்பேற்காவிட்டிருந்தால் என்ன நிலைமை ஏற்பட்டிருக்கும் என்பது அனைவருக்கும் தெரியும்.
டித்வா புயலினால் மீன்பிடித்துறையும் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தது. 10000 மில்லியன் ரூபா பாதிப்புகள் ஏற்பட்டிருந்தது. அதிலிருந்தும் மீன்பிடித்துறையினை கட்டியெழுப்புவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றோம்.
இந்த நாட்டில் ஒரு மாற்றமான அரசியல் முன்னெடுத்துவரும் நிலையில் உலகளவிலும் ஒரு மாற்றமான அரசியல் சூழ்நிலையேற்பட்டுள்ளது. அதனை சிலர் பயன்படுத்தும் நிலைமைகளை காணமுடிகின்றது.
இதேபோன்று இந்த நாட்டில் மழு நாட்டினையும் ஒன்றிணைக்கும் வகையிலான போதைப்பொருள் ஒழிப்பு வேலைத்திட்டத்தினை நாங்கள் ஆரம்பித்திருக்கின்றோம். இந்த நாட்டில் வெள்ளைப்பக்கம் ஒன்று இருப்பதுபோது கறுப்பு போதைப்பொருள் பக்கம் ஒன்று இருக்கின்றது. பொலிஸ், இராணுவம், புலனாய்வுப்பிரிவு, குடிவரவு, நடிகர், நடிகைகள் என அனைத்து பகுதிகளிலும் இன்று இந்த போதைப்பொருள் வலைப்பின்னல் பரவிக் காணப்படுகின்றது. அதனை நாங்கள் சும்மா கடந்து செல்வதற்கு தயாராகயில்லை. இந்த நச்சுப்போதைப்பொருளை இந்த நாட்டிலிருந்து அடியோடு ஒழிக்கும் வரையில் எமது செயற்பாடு முன்னெடுக்கப்படும்.








