மீண்டும் தாக்குதல் நடத்தினால் கடந்த காலத்தை விட மிகவும் வலுவான பதிலடி : ஈரான் எச்சரிக்கை!!
தமக்கு எதிராக மீண்டும் இராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டால், கடந்த காலத்தை விட மிகவும் வலுவான மற்றும் தீர்க்கமான பதிலடி வழங்கப்படும் என ஈரான் வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அராக்சி மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தெஹ்ரானில் தூதுவர்கள் மற்றும் சர்வதேச அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற சந்திப்பில் அவர் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
அதேநேரம், இராஜதந்திர நடவடிக்கைகளுக்கு ஈரான் தொடர்ந்து உறுதியாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தொடரின் போது நியூயோர்க்கில் இடம்பெற்ற சந்திப்புகளில், இராஜதந்திரத்தின் மூலம் பிரச்சினைகளுக்கு தீர்வு காண ஈரான் தயாராக இருப்பதையும், தம்மைப் பாதுகாத்துக்கொள்ள உறுதியாக இருப்பதையும் வெளிப்படுத்தியதாக அராக்சி குறிப்பிட்டுள்ளார்.
ஹோர்முஸ் நீரிணையின் பாதுகாப்பை ஏழு நாட்களுக்குள் மீள ஏற்படுத்துவதற்கான முன்மொழிவையும் ஈரான் முன்வைத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், ஈரான் தூதுக்குழுவினர் அமெரிக்காவில் இருந்து வெளியேற்றப்பட்டதாக கூறப்படும் தகவலை அவர் நிராகரித்துள்ளார்.
இதனிடையே, ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மேற்கொண்ட இராணுவத் தாக்குதல்களில் ஐரோப்பிய நாடுகளின் பங்களிப்பு குறித்து அவை விளக்கமளிக்க வேண்டும் என்றும் அராக்சி கோரிக்கை விடுத்துள்ளார்.
தடைகள், அழுத்தங்கள் மற்றும் அச்சுறுத்தல்கள் மூலம் ஈரான் தனது நலன்களை பாதுகாப்பதில் இருந்து பின்வாங்காது என்றும் ஈரான் வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அராக்சி தெரிவித்துள்ளார்.