கொசோவோவின் முன்னாள் ஜனாதிபதி ஹாஷிம் தாசிக்கு 25 வருட சிறைத் தண்டனை!
கொசோவோவின் முன்னாள் ஜனாதிபதி ஹாஷிம் தாசி (Hashim Thaci) மீதான போர்க்குற்றங்கள் நிரூபிக்கப்பட்டதை அடுத்து, அவருக்கு 25 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆதரவு பெற்ற விசேட நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
செர்பியாவிடமிருந்து கொசோவோ சுதந்திரம் பெறுவதற்காக நடைபெற்ற போரின் போது (1998-1999) இடம்பெற்ற கொலை, சித்திரவதை, கொடூரமான முறையில் நடத்துதல் மற்றும் தன்னிச்சையாகக் கைது செய்தல் ஆகிய நான்கு போர்க்குற்றச் சாட்டுகளின் கீழ் அவர் குற்றவாளியாகக் காணப்பட்டுள்ளார்.
நெதர்லாந்தின் ஹேக் நகரில் உள்ள கொசோவோ விசேட நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது.
வழக்கு விசாரணைகளை எதிர்கொள்வதற்காக 58 வயதான ஹாஷிம் தாசி, சுமார் ஆறு ஆண்டுகளுக்கு முன்பு தனது ஜனாதிபதி பதவியிலிருந்து விலகியிருந்தார்.
கொசோவோ விடுதலைப் படையின் தலைவர்களில் ஒருவரான ஹாஷிம் தாசி உட்பட நான்கு பேர் மீதும் போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்துக்கு எதிரான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்தன.
இவர்கள் மீது அதிகபட்சமாக 45 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட வேண்டும் என அரசுத்தரப்பு சட்டத்தரணிகள் கோரியிருந்த போதிலும், அவர்கள் அனைத்துச் சாட்டுகளையும் மறுத்து வந்தனர்.
தண்டனை அறிவிக்கப்பட்ட போது, நீதிமன்றத்தில் அமைதியான முறையில் நின்று கொண்டிருந்த தாசி, தன் மீதான குற்றச்சாட்டுகள் குறித்துப் பேசுகையில், தான் எப்போதும் கொசோவோ மக்களின் சுதந்திரம் மற்றும் கண்ணியத்துக்காகவே செயற்பட்டதாகத் தெரிவித்திருந்தார்.
இதேவேளை, போரின் போது தேசிய வீரார்களாகப் பார்க்கப்பட்ட ஹாஷிம் தாசி மற்றும் ஏனைய மூவருக்கும் ஆதரவாக கொசோவோவின் தலைநகரான பிரிஸ்டினாவில் (Pristina) ஆயிரக்கணக்கான மக்கள் அண்மையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
மேலும், சாட்சிகளை அச்சுறுத்தியதாக தாசி மீது சுமத்தப்பட்டுள்ள மற்றுமொரு தனிப்பட்ட வழக்கின் விசாரணை இந்த மாத இறுதியில் தொடங்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.