இலங்கையின் கடன் சுமை அதிகரித்துள்ளது என்ற தகவல்கள் முற்றிலும் தவறானவை.!
இலங்கையின் கடன் சுமை அதிகரித்துள்ளதாக எதிர்க்கட்சிகளும் சில ஊடகங்களும் பரப்பி வரும் செய்திகள் முற்றிலும் தவறானவை, ஆதாரமற்றவை மற்றும் மக்களைத் தவறாக வழிநடத்துபவை எனத் தொழிலாளர் அமைச்சரும், நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சருமான கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ ஊடங்களிடம் தெரிவித்தார்.
மத்திய வங்கியின் தரவுகளைத் தவறாகப் பயன்படுத்தி பரப்பப்படும் செய்திகள் குறித்துத் தெளிவுபடுத்திய அவர், கடன்கள் தொடர்பான புள்ளிவிவரங்கள் காலாண்டு வாரியாக ‘Debt Bulletin ‘ அறிக்கை மூலமாகவே அரசால் பொறுப்புடன் வெளியிடப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
நாட்டின் மொத்த கடனை அமெரிக்க டொலர்களில் கணக்கிடும்போது கடன் சுமை குறைந்துள்ளதாக தெரிவித்த அவர், 2025 டிசம்பர் 31 நிலவரப்படி 100.3 பில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்த மொத்தக் கடன், 2026 மார்ச் மாதத்தில் 98.9 பில்லியன் டொலராகவும், 2026 ஜூன் மாத இறுதியில் 95.04 பில்லியன் டொலராகவும் மேலும் குறைந்துள்ளது என்றார்.
2032ஆம் ஆண்டுக்குள் அடைவதற்கு இலக்கு வைக்கப்பட்டிருந்த மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 95 வீதம் எனும் கடன் சுமை அளவை இலங்கை ஏற்கனவே 2025 டிசம்பர் மாதத்துக்குள் எட்டிவிட்டதுடன், 2026 ஜூன் மாதமளவில் இந்தப் பங்கு 88.8 வீதமாக மேலும் குறைந்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
கடன் தொகை எண்களின் அடிப்படையில் மாறுபடுவதும் நாட்டின் கடன் பெறும் திறன் அதிகரிப்பதும் பொருளாதார ரீதியில் இரு வேறுபட்ட விடயங்களாகும் என்று குறிப்பிட்ட அவர், எதிர்க்கட்சிகளும் ஊடகங்களும் அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களின் அடிப்படையில் மட்டுமே கருத்துக்களை முன்வைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.