மனித உரிமை வழக்குகளில் அரசு தாமதம் – HRW
இலங்கையில் கடந்த காலங்களில் இடம்பெற்ற பாரதூரமான மனித உரிமை மீறல்கள் தொடர்பான வழக்குகளைத் தொடர்வதில் தற்போதைய அரசு தாமதித்து வருவதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.
இதனால், இலங்கையில் மனித உரிமைகள் தொடர்பான எதிர்கால முன்னேற்றம் குறித்து கவலைகள் ஏற்பட்டுள்ளதாக அந்த அமைப்பு வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள், சித்திரவதைக்கு உள்ளானவர்கள் மற்றும் கொ** செய்யப்பட்டவர்கள் தொடர்பான பல வழக்குகள் இதுவரை குறிப்பிடத்தக்க முன்னேற்றமின்றி உள்ளதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரும் மனித உரிமைப் பாதுகாவலர்களும் தொடர்ந்து அச்சுறுத்தல்கள் மற்றும் மிரட்டல்களை எதிர்கொண்டு வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
2024ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கம், லசந்த விக்கிரமதுங்க படு**லை, பிரகீத் எக்னெலிகொட காணாமல் ஆக்கப்பட்டமை, 11 இளைஞர்கள் கடத்தப்பட்டமை மற்றும் உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் உள்ளிட்ட சில வழக்குகளில் வரையறுக்கப்பட்ட முன்னேற்றங்களை ஏற்படுத்தியுள்ளதாகவும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.
எனினும், மூத்த அதிகாரிகள் தொடர்புபட்ட 17 உதவிப் பணியாளர்கள் படு**லை மற்றும் 5 தமிழ் மாணவர்கள் கொ**ப்பட்ட சம்பவம் உள்ளிட்ட முக்கிய வழக்குகளில் இதுவரை எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையினால் நிறுவப்பட்ட இலங்கை பொறுப்புக்கூறல் திட்டத்தை தற்போதைய அரசு ஏற்றுக்கொள்ளவில்லை என்றும், சுயாதீனமாக வழக்குத் தொடரும் அமைப்பொன்றையும் இதுவரை நிறுவவில்லை என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பல தசாப்தங்களாக நிலவி வரும் தண்டனையின்மைக்கு முற்றுப்புள்ளி வைத்து, உண்மையான பொறுப்புக்கூறலை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை இலங்கை அரசு விரைவுபடுத்த வேண்டும் என மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது.
அத்துடன், நீதியை நிலைநாட்டுவதற்கான தனது உறுதிப்பாட்டை செயற்பாடுகள் மூலம் வெளிப்படுத்துமாறு ஐ.நா. மனித உரிமைகள் பேரவையும் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசை வலியுறுத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.