உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
7 திங்கள்

முறையற்ற குழாய்க் கிணறுகளின் பயன்பாட்டை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.!

இலங்கை செய்திகள் 5 நாட்கள் முன்
85 பார்வைகள்

எதிர்கால சந்ததியினரின் நலன் கருதி நிலத்தடி நீரைப் பாதுகாக்கும் நோக்கில், முறையற்ற குழாய்க் கிணறுகளின் பயன்பாட்டை கட்டுப்படுத்த தகுந்த சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட பொருத்தமான பொறிமுறைகள் உருவாக்கப்படும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் வலியுறுத்தினார்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் நீர்வளம் பேணுதலுக்கான பேராய்வுச் செயற்றிட்டம் மற்றும் வடக்கின் இளம் நீர் வாண்மையாளர் வட்டம் ஆகியன இணைந்து ஏற்பாடு செய்துள்ள ‘நிலத்தடி நீர் எங்கள் உயிர் நாடி’ எனும் தொனிப்பொருளில் நிலத்தடி நீர் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வுக் கண்காட்சி, இன்று (02) புதன்கிழமை மாலை நல்லூர் பாரதியார் சிலைக்கு அருகிலுள்ள நெசவுக் கைத்தொழில் பயிற்சி நிறுவன வளாகத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும்போதே ஆளுநர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

நிகழ்வில் ஆளுநர் மேலும் உரையாற்றுகையில்,
முந்தைய காலங்களில் யாழ்ப்பாணத்தின் நிலத்தடி நீர் மிகவும் தூய்மையாகக் காணப்பட்டதுடன், மக்கள் கிணற்று நீரை நேரடியாகவே பருகி வந்தனர்.

ஆனால் தற்போது, குடிநீருக்காகப் போத்தல்களில் அடைக்கப்பட்ட நீரை அதிக விலைகொடுத்து வாங்க வேண்டிய துரதிஷ்டவசமான நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

1950களுக்குப் பின்னர் நிலத்தடி நீரை உறிஞ்சும் குழாய்க் கிணறுகளின் பயன்பாடு கட்டுக்கடங்காமல் அதிகரித்துள்ளமை, முறையற்ற விதத்தில் அதிகளவான குழாய்க் கிணறுகள் அமைக்கப்பட்டமை மற்றும் கழிவுநீர் நிலத்தடி நீருடன் கலக்கின்றமை போன்ற காரணங்களால் நீரின் தரமும் அளவும் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

எனவே, குழாய்க் கிணறுகளின் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தத் தகுந்த சட்ட நடவடிக்கைகளும், முறையான கண்காணிப்பு வழிமுறைகளும் உடனடியாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். இதனைச் சாத்தியமாக்க உரிய தரப்பினருக்கு அழுத்தம் கொடுக்கப்பட வேண்டியது அவசியமாகும்.

மழைநீரை நிலத்தடியில் சேமிக்கும் திட்டங்களை விரிவுபடுத்துவதுடன், கழிவுநீர் மற்றும் உவர் நீர் நன்னீருடன் கலப்பதைத் தடுக்க முறையான முகாமைத்துவ நடவடிக்கைகள் உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டும். நிலத்தடி நீரைப் பாதுகாப்பது என்பது ஒவ்வொரு தனிநபரின் கூட்டுப் பொறுப்பாகும். விழிப்புணர்வுடன் செயற்பட்டு, எதிர்காலச் சந்ததியினருக்காக நமது நீர் வளங்களைப் பாதுகாக்கும் இவ்வாறான செயற்றிட்டங்களுக்கு அனைவரும் முழுமையான ஆதரவை வழங்க முன்வர வேண்டும் எனத் தெரிவித்தார்.

அத்துடன், வெளிநாட்டில் வசித்தாலும் யாழ்ப்பாணத்தின் நிலத்தடி நீரைப் பாதுகாக்கும் நோக்கில் தொடர்ச்சியான ஆய்வுகளை மேற்கொண்டு வருவதுடன், பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், பெரியவர்கள் என சமூகத்தின் அனைத்துத் தரப்பினரையும் ஒன்றிணைத்து இவ்வாறான விழிப்புணர்வுத் திட்டங்களையும் கண்காட்சிகளையும் முன்னெடுத்து வரும் பேராசிரியர் சிறிஸ்கந்தராஜாவின் பங்களிப்பையும் ஆளுநர் பாராட்டினார்.

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் பெருந்திருவிழாவை முன்னிட்டு மூன்றாவது ஆண்டாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்தக் கண்காட்சி, எதிர்வரும் 11ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரை தினமும் காலை 9 மணி தொடக்கம் இரவு 9 மணி வரை நடைபெறும்.

நீரியல் ஆய்வுகள் ஊடாகப் பெறப்பட்ட பெறுபேறுகள், மக்கள் ஈடுபாட்டுடனான செயற்திட்ட அனுபவங்கள், வழுக்கையாறு மற்றும் கிராமியக் குளங்களை முறையான தொழில்நுட்ப அறிவுடன் தூர்வாருதல் தொடர்பான விபரங்கள் முப்பரிமாண தோற்றங்களாக, செய்திகளாக மற்றும் படங்களாக இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், நீர்வளக் கண்காட்சியின் ஒரு கட்டமாக ஊருணி ஆற்றுகைக் களத்தில் தினமும் மாலை 7 மணி முதல் கருத்துரைகளும் கலை, பண்பாட்டு, பாரம்பரிய நிகழ்வுகளும் அரங்கேற உள்ளன.

நீர்வள சபை, நீர்ப்பாசனத் திணைக்களம், தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை, யாழ்ப்பாண மாநகர சபை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி, வேம்படி மகளிர் கல்லூரி மற்றும் தன்னார்வக் குழுக்கள் பலவற்றின் ஒத்துழைப்புகளுடன் நடைபெறும் இக்கண்காட்சியில் கலந்துரையாடல்கள், மாதிரிகள், பதாகைகள், ஆய்வு விபரங்கள், பரிசுப் போட்டிகள், விளையாட்டுகள், பாரம்பரிய நிகழ்ச்சிகள், குலுக்கல் பரிசுகள் ஆகியவை இடம்பெறுகின்றன.

இந்த நிகழ்வில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர், மருத்துவ பீட பீடாதிபதி, கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களத்தின் பணிப்பாளர், விவசாயத் திணைக்கள யாழ். மாவட்ட பிரதிப் பணிப்பாளர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

புதையல் தோண்டிய ஐவர் கைது.!

ஹிங்குராக்கொடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தல்பொத்த பகுதியில் புதையல் தோண்டும் முயற்சியில் ஈடுபட்ட ஐந்து சந்தேகநபர்களைப் பொலிஸார் கைது செய்துள்ளனர். பொலிஸ் அதிகாரிகளுக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைய,…

120 0 0
இலங்கை செய்திகள்

இந்தியாவில் இருந்து கடல் வழியாக வருகை தந்த 11 பேரும் பிணையில் விடுவிப்பு.!

இந்தியாவில் இருந்து படகு மூலம் இலங்கைக்குள் நுழைய முற்பட்டவேளை மணல் தீவுகளில் மீட்கப்பட்ட 11 பேரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். தலைமன்னார் கடற்பரப்பில் கடற்படையினர் தமது ரோந்து நடவடிக்கையில்…

99 0 0
இலங்கை செய்திகள்

20 இற்குத் தேவையான சர்வஜன வாக்கெடுப்பு 22 இற்கு ஏன் அவசியம் இல்லாமல் போனது?

அன்று 20ஆவது திருத்தத்தின்போது சர்வஜன வாக்கெடுப்பைக் கோரியவர்கள், இன்று 22ஆவது திருத்தத்துக்கு அதனைத் தவிர்ப்பது ஏன் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ கேள்வி எழுப்பியுள்ளார். ஐக்கிய…

107 0 0
இலங்கை செய்திகள்

தேர்தல் களத்திலேயே அரசு தோற்கடிக்கப்படும்.!

சிவப்பு ஜுண்டாக்களுக்கு அஞ்சித் தாம் ஒருபோதும் இரண்டுக்கு மூன்றாக வளைந்துகொடுக்கப் போவதில்லை எனவும், வன்முறை வழிகளில் அல்லாமல் ஜனநாயக ரீதியிலான தேர்தல் களத்திலேயே அரசு தோற்கடிக்கப்படும் எனவும்…

119 0 0