மன்னார் தேசிய உப்பு நிறுவனத்தின் புதிய நிர்வாகத் தொகுதி, களஞ்சியசாலை திறப்பு விழா.!
கனிம வளங்கள் நிறைந்த மன்னார் மாவட்டத்தில் கனிம எண்ணெய் மற்றும் எரிவாயு (கேஸ்) பரிசீலனைக்கு அரசு தற்போது நிதி ஒதுக்கீடு செய்து முன்னெடுப்புகளை செய்து வருகிறது. அவ்வாறான ஒரு நாளை நாங்கள் எதிர்காலத்தில் சந்திக்க இருக்கிறோம்.
இந்த சந்தர்ப்பத்தில் மன்னார் மாவட்டம் வரலாற்றில் பதியப்படுகின்ற ஒரு முக்கியமான மாவட்டமாக நாங்கள் காண இருக்கிறோம் என தொழில்துறை மற்றும் தொழில் முனைவோர் அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்தார்.
மன்னார் தேசிய உப்பு நிறுவனம் புதிய நிர்வாகத் தொகுதி மற்றும் களஞ்சிய சாலையின் திறப்பு விழா இன்றைய தினம் வியாழக்கிழமை (27) காலை 11 மணியளவில் இடம் பெற்றது.
இதன்போது குறித்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
மன்னார் மாவட்டத்திற்கு காலடி எடுத்து வைக்கும் பொழுது, நடப்பு அரசாங்கத்தின் ஒரு அமைச்சராக நான் வருகின்ற பொழுது, இன்று பல பேரையும் இங்கு காணக்கூடியதாக இருக்கிறது. ஆகவே, இந்த ஒரு தனி மனிதனால் தொடங்கப்பட்ட இந்த மக்கள் வெள்ளம் அதிகரித்து காணப்படுகிறது என்பதை இங்கே குறிப்பிட வேண்டிய முக்கியமான ஒரு விடயம்.
அதே நேரத்திலே, இந்த சந்தர்ப்பத்தில் நான் இந்த இடத்திற்கு வந்து பார்த்த ஒரு விடயம். பழைய மன்னார் உப்பு கூட்டுத்தாபனத்தின் கட்டிடத் தொகுதியின் ஒரு புகைப்படத்தை நான் பார்த்தேன். அது 40 வருடங்களாக இருந்த காட்சி. 40 வருடங்களாக அங்கே காணப்பட்டிருந்த காட்சி. இந்த விடயம் சார்பாகவும், அதே நேரத்தில் இந்த உப்பளத்தின் 4,000 ஏக்கர் நிலப்பரப்பையும் நாங்கள் அபிவிருத்தி அடையச் செய்ய வேண்டும் என்ற தேவைப்பாடு எங்களுக்கு இருந்தது.
அந்தத் தேவைப்பாடு கருதி, நாங்கள் 2 கோடியே 58 இலட்சம் ரூபாய் பெறுமதி கொண்ட ஒரு வருமானத்தைப் பெற்று, அந்த வருமானத்திலிருந்து திறைசேரியிலிருந்து ஒதுக்கீட்டை வழங்கி, அந்த ஒதுக்கீட்டிற்கு அமைவாகவே அந்த நிர்வாகக் கட்டிடத் தொகுதியையும், களஞ்சியக் கட்டிடத் தொகுதியையும் அமைத்திருக்கிறோம்.
இந்த வகையிலே திறைசேரி உப்பு நிறுவனத்திற்காக வேண்டி ஒதுக்கி இருக்கிற இந்தப் பணம், உங்களது வியர்வையினால் பெறப்பட்ட பணம். அதாவது, நீங்கள் உற்பத்தி செய்த உப்பினை விற்றுப் பெற்ற இலாபத்தினால் திறைசேரிக்கு வழங்கப்பட்ட பணத்திலிருந்து ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கின்றது.
ஆகவே, இது உங்களுடைய சொத்து. ஆகவே, உங்கள் சிரமத்தினால் இந்தப் பணம் சம்பாதிக்கப்பட்டிருக்கின்றது என்பதை நான் இந்த சந்தர்ப்பத்தில் சந்தோஷத்துடன் தெரிவிக்க வேண்டும். அதுமட்டுமல்லாமல், உங்களுக்குத் தெரியும், உப்பு இல்லாமல் உணவு இல்லை. ஆகவே, எல்லோருக்கும் உப்பு அத்தியாவசியமான ஒரு பொருள். ஆனால், எல்லோராலும் இந்த உப்பு உற்பத்தி செய்ய முடியாது.
உப்பு உற்பத்தி செய்வதற்கு ஒரு காலம் தேவை. அதே நேரத்தில், சிறந்த சூரிய ஒளி கிடைக்கப்பெற வேண்டும். அதேநேரம் கடல் நீர் கிடைக்கப்பெற வேண்டும், நல்ல காற்று கிடைக்கப்பெற வேண்டும். ஆகவேதான் இந்தத் தூய்மையான உப்பை நம்மால் உற்பத்தி செய்ய முடியும்.
இந்த அனைத்து வளங்களும் மன்னார் மாவட்டத்தில் தான் காணப்படுகின்றன. ஆகவே, இவற்றோடு சேர்த்து இந்த மனித வளமும் சேர்ந்தால்தான் அந்த கிரிஸ்டல் (Crystal) உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது. அம்பாந்தோட்டையிலும் உப்பு உற்பத்தி செய்யப்பட்டாலும் கூட, அது சற்று நிறமாற்றம் பெற்ற ஒரு உப்புத் தொகுதியாகவே நாங்கள் காண்கிறோம். ஆகவே, மன்னார் மாவட்டத்தில் விளைகின்ற உப்புக்கு மிகப்பெரிய மதிப்பும் கிராக்கியும் சந்தையிலே காணப்படுகிறது .
இயற்கையால் கிடைக்கப்பெறுகின்ற இந்தச் சூரிய ஒளி, கடல் நீர், காற்று என்பவற்றோடு உங்களது சிரமமும் கலந்த சொத்துதான் இந்த உப்பு என்பதை இங்கே கூறிக் கொள்ள விரும்புகிறேன். இங்கே உற்பத்தியாளர்கள் என்ற வகையில் நீங்கள் பங்குகொண்டுள்ள ஊழியர்கள் என்ற வகையில் 25 பேர் நிரந்தர ஊழியர்களாக காணப்படுகின்ற சந்தர்ப்பத்திலே, 70க்கும் மேற்பட்டவர்கள் பகுதி நேர ஊழியர்களாக காணப்படுகின்றார்கள்.
உங்களுக்குத் தெரியும், 788 மில்லியன் ரூபாய் நாங்கள் இந்த உப்பு உற்பத்திக்கு முதலீடு செய்து, அதில் 2 கோடியே 58 மில்லியன் ரூபாய் எங்களுக்கு வருமானமாகக் கிடைக்கபெற்றிருக்கின்றன. அதே நேரத்தில், இந்த தேசிய உப்பு உற்பத்தியில் 100-க்கு 30 சதவீதமான உப்பு மன்னார் உப்பளத்தில் இருந்து உற்பத்தி செய்யப்படுகிறது என்பதையும் இந்த இடத்திலே ஞாபகமூட்டல் வேண்டும்.
ஆகவே, இந்த நிலைமைகளை நாங்கள் விரிவாக்கி, உப்பளத்தினுடைய உற்பத்தித் திறனை மேம்படுத்த வேண்டிய தேவைப்பாடு எங்களுக்கு இருக்கின்றது. ஆகவே, இந்த நடவடிக்கைகளின் ஊடாக மக்கள் இலகுவாக பெற்றுக்கொள்ளக்கூடிய, அதே நேரத்தில் குறைந்த விலையில் பெற்றுக் கொள்ளக்கூடிய உப்பை சந்தைக்கு வழங்க வேண்டிய தேவைப்பாடு இங்கு நிறைவு செய்ய வேண்டிய தேவை உள்ளது.
நாங்கள் ஆட்சிக்கு வந்த பொழுது நாங்கள் சந்தித்த ஒரு பிரச்சினைதான் உப்பு தட்டுப்பாடு. இறக்குமதி செய்துதான் இலங்கையின் உப்புத் தேவையை பூர்த்தி செய்ய வேண்டிய ஒரு நிலைமை காணப்பட்டது. ஆகவே, நாங்கள் வெளிநாடுகளுக்கு டொலர்களை இறைக்க வேண்டிய தேவைப்பாடு இருந்தது. ஆகவே 2025 ஆகும் பொழுதும், 2026 ஆகும் பொழுதும் படிப்படியாக இந்த நிலைமைகள் குறைக்கப்பட்டது.
தற்போது உள்நாட்டுத் தேவை மொத்தமாக உள்நாட்டு தன்னிறைவு உற்பத்தியிலேயே இடம்பெறுகின்றது. இவ்வாறான நிலைப்பாட்டுக்கு நாங்கள் தள்ளப்பட முடியாது என்பதை இந்த சந்தர்ப்பத்தில் தெரிவிக்க விரும்புகிறேன்.
அதே நேரத்தில், உங்களது உப்பு உற்பத்திக்கு வேண்டி அதிக நிலம் கட்டாயமாக தேவைப்படும். அந்த வகையில், நாங்கள் 500 ஏக்கர் வனவளத் திணைக்களத்திற்கு சொந்தமான, உப்பு உற்பத்திக்கு தகுந்த இடம் மன்னார் மாவட்டத்தில் காணப்படுகின்ற படியினால், பொருத்தமான நடவடிக்கைகள் மூலம் அந்த நிலத்தையும் பெற்று உப்பு உற்பத்தியை அதிகரிக்க திட்டமிட்டிருக்கிறோம்.
அதே நேரத்தில், ஆனையிறவு உற்பத்தி சார்ந்த தொகுதி ஒன்றையும், உப்பு உற்பத்தி சார்ந்த தொகுதி ஒன்றையும் அமைச்சரவை அனுமதி பெறப்பட்டிருக்கிறது. அதற்கமைவாக அவற்றை நாங்கள் செய்யத் தயாராக இருக்கிறோம். உங்களது உழைப்பாளர்களது வேலை, முகாமையாளர்களது பங்களிப்பு, அதே நேரத்தில் நீங்கள் காட்டுகின்ற ஆர்வம் என்பவற்றினால் இந்த இலக்கை நாங்கள் எய்தி இருக்கிறோம். இது நீங்கள் அடைந்த வெற்றி என்றுதான் நான் இந்த இடத்திலே சொல்ல விரும்புகின்றேன்.
ஆகவே, ஊழியர்களது நலம்பாடு, உங்களது சம்பள உயர்வு, உங்களது உரிமைகள், உங்களது குடும்ப வாழ்க்கையிலே மேம்பாடு போன்றவற்றையும் வழங்க நாங்கள் எதிர்காலத்தில் திட்டமிட்டிருக்கிறோம்.
மன்னார் மாவட்டம் என்பது வளங்கள் நிறைந்த ஒரு மாவட்டம். ஆகவே, இந்த கனிம வளங்கள் நிறைந்த மாவட்டத்தை, நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். கனிம எண்ணெய் மற்றும் எரிவாயு (கேஸ்) பரிசீலனைக்கு அரசு தற்போது நிதி ஒதுக்கீடு செய்து முன்னெடுப்புகளை செய்து வருகிறது.
அவ்வாறான ஒரு நாளை நாங்கள் எதிர்காலத்தில் சந்திக்க இருக்கிறோம். அந்தச் சந்தர்ப்பத்திலே மன்னார் மாவட்டம் வரலாற்றில் பதியப்படுகின்ற ஒரு முக்கியமான மாவட்டமாக நாங்கள் காண இருக்கிறோம் .
அதுமட்டுமல்லாமல், நாங்கள் அதிகப்படியான டொலர்களை வெளிநாட்டுச் சந்தைகளுக்கு அனுப்புவதை நிறுத்தி, எங்களது நாட்டில் தன்னிறைவான உப்பு உற்பத்தியை மேம்பாடடையச் செய்வதற்கு, உப்பில் தன்னிறைவு அடைவதற்கு உங்கள் வியர்வை மிக முக்கியமானது. உங்களது கரங்களின் பணி மிக முக்கியமானது என்பதைக் கூறிக்கொள்கின்றேன் என அவர் மேலும் தெரிவித்தார்.
குறித்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் ஜெகதீஸ்வரன், தேசிய உப்பு நிறுவனத்தின் தலைவர் மற்றும் பணிப்பாளர் சபை உறுப்பினர்கள், மன்னார் உப்பு உற்பத்தி நிறுவனத்தின் முகாமையாளர் பணியாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.




