பண்டிகைக் காலத்தை முன்னிட்டு விசேட சுற்றிவளைப்பு.!
எதிர்வரும் தமிழ் – சிங்கள புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு, நாடு முழுவதிலுமுள்ள வர்த்தக நிலையங்களைப் பரிசோதிக்கும் விசேட நடவடிக்கை நேற்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்று இலங்கை பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இச்சோதனை நடவடிக்கைகள் குறித்து அந்தச் சங்கத்தின் செயலாளர் சமில் முத்துகொட ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கையில்,
“இந்த விசேட சோதனை நடவடிக்கைகளுக்காக நாடு முழுவதிலும் சுமார் 2 ஆயிரம் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
பண்டிகைக் காலத்தில் நுகர்வோருக்குத் தரமான உணவுப் பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்வதும், சுகாதார விதிமுறைகளை மீறும் வர்த்தகர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுப்பதும் இதன் முக்கிய நோக்கமாகும்.” – என்றார்.
இதேவேளை, பண்டிகைக் காலத்தை முன்னிட்டு நுகர்வோர் விவகார அதிகார சபையும் வர்த்தக நிலையங்களைச் சோதனை செய்யும் விசேட சுற்றிவளைப்புகளை ஆரம்பித்துள்ளது.
பொருட்களின் விலைப்பட்டியல் காட்சிப்படுத்தப்படாமை, அதிக விலைக்கு விற்பனை செய்தல் மற்றும் காலாவதியான பொருட்களை விற்பனை செய்தல் போன்ற முறைகேடுகள் குறித்து இதன்போது தீவிர கவனம் செலுத்தப்படவுள்ளது.