பண்டாரியாவெளியில் பாரிய கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை.!
மட்டக்களப்பு மாவட்டத்தின் கொக்கட்டிச்சோலை காவல் பிரிவுக்குட்பட்ட பண்டாரியாவெளி பகுதியில் இயங்கிவந்த பாரிய அளவிலான சட்டவிரோத கசிப்பு உற்பத்தி நிலையம் காவல்துறையினரால் முற்றுகையிடப்பட்டுள்ளது.
கொக்கட்டிச்சோலை காவல்துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது, பண்டாரியாவெளி கண்ணாக்காடு பகுதியில் மிக இரகசியமான முறையில் இந்த கசிப்பு உற்பத்தி நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வந்தது தெரியவந்துள்ளது.
சுற்றிவளைப்பின் போது நான்கு பரல்களில் சேமித்து வைக்கப்பட்டிருந்த சுமார் 8 இலட்சம் மில்லிலீற்றர் கோடா மீட்கப்பட்டதுடன், கசிப்பு காய்ச்ச பயன்படுத்தப்பட்ட உபகரணங்கள் மற்றும் தயாரிக்கப்பட்ட கசிப்பும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எனினும், முற்றுகை இடம்பெற்றவேளையில் சம்பந்தப்பட்ட சந்தேகநபர்கள் தப்பிச் சென்றுள்ளதாகவும், கைப்பற்றப்பட்ட பொருட்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கான நடவடிக்கைகளும் தப்பிச் சென்றவர்களை கைது செய்வதற்கான விசாரணைகளும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.