பண்டிகைக் காலத்தில் அரிசி விலை உயரும் அபாயம் இல்லை – அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவிப்பு.!
இலங்கையில் அரிசி விலையை நிர்ணயிக்கும் முக்கிய அரிசி வர்த்தக மையமாகக் கருதப்படும் மரதகஹமுல களஞ்சிய வளாகம் தற்போது அரிசி கையிருப்பால் நிரம்பியுள்ளதாக வர்த்தக, வாணிப மற்றும் கூட்டுறவு அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
மரதகஹமுல கூட்டுறவு மொத்த வர்த்தக நிறுவனத்திற்குச் சொந்தமான களஞ்சியங்களை பார்வையிட்டபோது அவர் இதனை குறிப்பிட்டார்.
கடந்த 13 ஆண்டுகளாக ஒரு நெல் மூட்டையோ அல்லது அரிசி மூட்டையோ கூட சேமிக்கப்படாமல் இருந்த களஞ்சியம் தற்போது அரிசியால் நிரம்பியிருப்பது குறிப்பிடத்தக்க முன்னேற்றமாகும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
மேலும் சுமார் 75 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் சேமிக்கக்கூடிய திறன் கொண்ட இரண்டு களஞ்சியங்கள் நீண்டகாலமாக சேதமடைந்து புறக்கணிக்கப்பட்டிருந்தது தேசிய இழப்பாக இருந்ததாகவும், தற்போதைய அரசின் கீழ் அவை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் அவர்கூறினார்.
அதேவேளை, அரசாங்கத்திடம் போதுமான அளவு அரிசி கையிருப்பில் இருப்பதால் வரவிருக்கும் பண்டிகைக் காலத்தில் அரிசி விலை அதிகரிக்காது என கூட்டுறவு மொத்த விற்பனை கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.