அரசுக்கு தெளிவான தூரநோக்கு உள்ளதா? – விஜயபால ஹெட்டியாராச்சி கேள்வி.!
தற்போதைய அரசாங்கத்திற்கு நாட்டின் சவால்களை எதிர்கொள்வதற்குத் தேவையான தெளிவான தூரநோக்கு உள்ளதா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விஜயபால ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று (13) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்த அவர், அரசு ஆட்சிக்கு வந்து ஓராண்டுக்கும் மேலாகியுள்ள போதிலும் மக்களின் பிரச்சினைகளுக்கு எதிர்பார்த்த தீர்வுகள் வழங்கப்படவில்லை எனக் குறிப்பிட்டார்.
ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் குறுகிய காலத்திற்குள் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதாக அரசு வாக்குறுதி அளித்திருந்தாலும், நடைமுறையில் அதற்கான முன்னேற்றங்கள் தென்படவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும், பொறுப்புள்ள எதிர்க்கட்சி என்ற வகையில் நாடு எதிர்கொள்ளக்கூடிய சவால்களை முன்கூட்டியே கையாளும் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும், நாட்டின் ஜனநாயகத்தை வலுப்படுத்த எதிர்காலத் திட்டங்களை எதிர்க்கட்சித் தலைவரின் தலைமையில் முன்னெடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.