கடும் வெப்பத்தில் பாடசாலை விளையாட்டுப் போட்டிகள்; எச்சரிக்கும் விசேட வைத்திய நிபுணர்.!
கடும் வெப்பமான வானிலையின் மத்தியில் நடத்தப்படும் பாடசாலை விளையாட்டு நிகழ்வுகளின் போது மிகவும் அவதானத்துடன் செயற்படுவது அவசியம் என கொழும்பு சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் சுவாச நோய்கள் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் சன்ன டி சில்வா தெரிவித்துள்ளார்.
வெப்பமான வானிலையால் ஏற்படக்கூடிய உடல்நலப் பாதிப்புகளை குறைக்கும் வழிமுறைகள் மற்றும் விளையாட்டு நிகழ்வுகளை நடத்தும் போது கவனிக்க வேண்டிய விடயங்கள் குறித்து பொதுமக்களுக்கு விளக்கமளிக்கும் நோக்கில் இன்று (13) சுகாதார மற்றும் ஊடக அமைச்சின் பிரதான கேட்போர் கூடத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இதனை குறிப்பிட்டார்.இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
பாடசாலை விளையாட்டு நிகழ்வுகளின் போது வெப்பநிலையை கருத்தில் கொண்டு போட்டிகளை குறைத்தல், மாணவர்களுக்கு இடையிடையே ஓய்வு வழங்குதல், நிழலான அல்லது குளிர்ச்சியான இடங்களில் தங்கவைத்தல் மற்றும் போதிய அளவு நீர் அல்லது உப்பு கலந்த பானங்களை வழங்குதல் முக்கியமானது என கூறினார்.
கடும் வெயில் நிலவும் காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரையான காலப்பகுதியில் விளையாட்டு நடவடிக்கைகளை முடிந்தவரை குறைத்துக்கொள்ள வேண்டும் என்றும், மாணவர்களுக்கு அடிக்கடி ஓய்வு வழங்குவது அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இவ்வாறான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாவிட்டால் உடல் வெப்பம் அதிகரித்து மயக்கம், சோர்வு, தசைப்பிடிப்பு போன்ற சிக்கல்கள் ஏற்படலாம். அவை கவனிக்கப்படாமல் விட்டால் உடல் வெப்பம் மேலும் அதிகரித்து உயிருக்கு ஆபத்தான வெப்ப அதிர்ச்சி நிலை ஏற்படும் அபாயமும் உள்ளதாக அவர் தெரிவித்தார்.
ஒரு பிள்ளைக்கு மயக்கம், சோர்வு, தலைச்சுற்றல் அல்லது குழப்ப நிலை ஏற்பட்டால் உடனடியாக அவரை வெயிலிலிருந்து அகற்றி குளிர்ச்சியான இடத்திற்கு அழைத்து சென்று நீர் வழங்க வேண்டும். நிலைமை தொடருமானால் தாமதிக்காமல் அருகிலுள்ள அரச வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்ல வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தினார்.