மாற்றுத்திறனாளிகளுக்காக புதிய பிரத்தியேக பேருந்து சேவை தொடக்கம்.!
மாற்றுத்திறனாளிகளுக்காக சிறப்பாக திட்டமிடப்பட்ட பிரத்தியேக பேருந்து சேவை அடுத்த மாதம் முதல் செயல்பாட்டில் வரும். போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு இதற்கான ஏற்பாடுகளை முடித்துள்ளது. க்ளீன் ஸ்ரீலங்கா திட்டத்தின் கீழ், 10 நவீன, தாழ்தள குளிரூட்டப்பட்ட பேருந்துகள் கொள்வனவு செய்யப்பட்டு ஹம்பாந்தோட்டை துறைமுகம் வந்து சேர்ந்துள்ளன.
இவை சக்கர நாற்காலி பயணிகளுக்கான சிறப்பு வசதிகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளன, பயணிகள் எவ்விதக் கஷ்டமும் இல்லாமல் ஏறி இறங்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பேருந்திலும் 33 ஆசனங்கள் மற்றும் 80 பயணிகள் வரை பயணிக்க வசதி உள்ளது. மேலும், சக்கர நாற்காலி பயணிகளுக்கான பாதுகாப்பு வசதிகளும் பூரணமாக அடங்கியுள்ளன.
மாக்கும்புர போக்குவரத்து மத்திய நிலையத்தை மையமாகக் கொண்டு, பேருந்துகள் காலை மற்றும் மாலை நேரங்களில் 40 நிமிடங்களுக்குஒருமுறை மாக்கும்புர – கோட்டை மற்றும் மாக்கும்புர – கடவத்தை பகுதிகளுக்கு சேவை செய்யும் வகையில் இயக்கப்படுகின்றன.
குறிப்பாக, மஹரகம அபேக்ஷா மருத்துவமனை மற்றும் கொழும்பு தேசிய வைத்தியசாலை போன்ற முக்கிய மருத்துவமனைகளை இணைக்கும் பாதைகளில் பேருந்துகள் சேவை செய்யப்படுவதால், மாற்றுத்திறனாளிகளுக்கு பயணங்கள் மிகவும் வசதியானதாக இருக்கும்.