மட்டக்களப்பில் மாபெரும் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை முன்னெடுப்பு.!
மட்டக்களப்பு நகரில் தமது வீடுகளை டெங்கு நுளம்பு பெருகும் வகையில் வைத்திருந்த 09 பேருக்கு எதிராக கடந்த மூன்று மாதங்களில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் மட்டக்களப்பு மாநகர சபைக்குட்பட்ட சில பகுதிகளில் தொடர்ந்து டெங்கு அபாயம் நிலவுவதாக மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் இ.உதயகுமார் தெரிவித்தார்.
மட்டக்களப்பு நகரில் இன்றைய தினம் மாபெரும் டெங்கு ஒழிப்பு நிகழ்வுகள் நடைபெற்றதுடன் டெங்கு நுளம்பு பெருகும் இடங்களும் தூய்மைப்படுத்தும் பணிகளும் முன்னெடுக்கப்பட்டன.
இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் ஏற்பாட்டிலும் மட்டக்களப்பு மாநகரசபை, மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம், மட்டக்களப்பு பொலிஸ் தலைமையகம் இணைந்து இந்த நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்தது.
மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட உப்போடை பகுதி டெங்கு தாக்கம் அதிகளவில் காணப்படும் பகுதியாக அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் இன்றைய தினம் விசேட நிகழ்வாக இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது வீடுகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதுடன் நுளம்பு பெருகும் வகையில் சூழலை வைத்திருந்தவர்களுக்கு எதிராக எச்சரிக்கை விடுக்கப்பட்டதுடன் டெங்கு நுளம்பினை ஏற்படுத்தும் குடம்பிகள் இனங்காணப்பட்ட வீடுகளுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பார் வீதியில் வெள்ள நீர் தேங்கியிருக்கும் பகுதிகளில் நீரை வழிந்தோடச் செய்யும் பணிகள் முன்னெடுக்கப்பட்டதுடன் நீர்நிலைகளில் காணப்பட்ட கழிவுகளும் அகற்றப்பட்டன.
இந்த நிகழ்வில் மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் இ.உதயகுமார், மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர் சுதர்ஸன், இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் உத்தியோகத்தர்கள், ஊழியர்கள், பொலிஸ் தலைமையக பொலிஸ் உத்தியோகத்தர்கள் என பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது கருத்து தெரிவித்த மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் இ.உதயகுமார்,
மட்டக்களப்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் தினமும் டெங்கு நோயாளர்கள் அடையாளப்படுத்தப்பட்டு வருகின்றனர். கொக்குவில், உப்போடை, கல்லடி, நாவற்குடா போன்ற பகுதிகளில் டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.
டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை அனைத்து தரப்பினரையும் இணைத்து முன்னெடுப்பதன் காரணமாக தற்போது டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை சற்று வீழ்ச்சியடைந்துள்ளது.
டெங்கு சோதனைகளை பொலிஸாரையும் இணைத்து முன்னெடுத்து வருகின்றோம். இதன்போது நுளம்பு பெருக்கத்திற்கு ஏதுவாக தமது சூழலை வைத்திருப்போருக்கு எதிராக உடனடியாக வழக்கு தாக்கல் செய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றது.
அதேபோன்று வெற்றுக் காணிகளை வைத்திருப்பவர்களுக்கு சுகாதார அலுவலகம் மூலம் அறிவித்தல்கள் வழங்கப்பட்டு காணிகளை துப்புரவு செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. அவ்வாறு துப்புரவு செய்யாதவர்களுக்கு மாநகர சபையின் மூலம் குறித்த காணிகளை சுவீகரிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. வெற்றுக் காணிகளுக்குள் சுவீகரிப்பு தொடர்பான அறிவித்தல் பலகைகள் இடப்படுகின்றன. 14 நாட்களுக்குள் குறித்த காணிகளை தூய்மைப்படுத்தாவிட்டால் அவற்றினை சுவீகரிப்பதற்கான சட்ட நடவடிக்கைகளை மாநகர சபை முன்னெடுக்கும் எனவும் தெரிவித்தார்.




