மத்திய கிழக்கு போர் நீண்டால் இலங்கைக்குப் பாரிய சிக்கல்!- முன்னாள் ஜனாதிபதி மஹிந்த பகிரங்க எச்சரிக்கை.
மத்திய கிழக்கில் நிலவி வரும் போர்ச் சூழல் நீண்ட காலம் தொடர்ந்தால் அது இலங்கையின் எதிர்காலத்திற்கு பாரிய பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த எச்சரிக்கை விடுத்துள்ளார்.
திஸ்ஸமஹாராம பகுதியில் அமைந்துள்ள அகுருகொட ஸ்ரீ மங்களராம விகாரையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட சைத்தியத்தின் திறப்பு விழாவில் இன்று (வியாழக்கிழமை) கலந்து கொண்டதன் பின்னர் ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கும் போது அவர் இதனை குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போது நிலவி வரும் சர்வதேச போர்நிலை நீண்ட காலம் நீடித்தால் அது இலங்கையின் பொருளாதாரம் மற்றும் பாதுகாப்பு தொடர்பான விடயங்களில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் கூறினார்.
அத்துடன், தமது ஆட்சிக் காலத்தில் நாட்டிற்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றிய புலனாய்வு பிரிவு அதிகாரி ஒருவர் தற்போது சிறையில் வைக்கப்பட்டுள்ளதாகவும், நாட்டுக்காக சேவை செய்தவர்களை மதிப்பதே உரிய செயலாகும் என்றும் அவர் தெரிவித்தார்.
அவர்களை மனிதாபிமானமற்ற முறையில் சிறையில் வைப்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று என்றும், இது பழிவாங்கும் காலம் அல்ல என்றும் அவர் குறிப்பிட்டார்.மேலும் தற்போதைய அரசு பௌத்த சாசனத்திற்கு உரிய முக்கியத்துவம் வழங்குகின்றதா என்ற கேள்வி எழுகிறது என்றும், தாம் ஆட்சியில் இருந்த காலத்தில் பௌத்த சாசனம் உயர்ந்த நிலையில் பேணப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
தற்போதைய அரசின் செயற்பாடுகள் குறித்து கருத்து தெரிவிக்கத் தேவையில்லை என்றும், அதனைப்பற்றி நாட்டு மக்களே நன்றாக அறிந்துள்ளனர் என்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ குறிப்பிட்டார்.