மின்சார தொழிற்சங்கங்களின் பணிப்புறக்கணிப்பு போராட்டம் கைவிடப்பட்டது.!
மின்சார தொழிற்சங்கங்களால் முன்னெடுக்கப்பட்டிருந்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் கைவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.தொழில் ஆணையாளர் நாயகம் மற்றும் புதிய மின்சார நிறுவனங்களின் தலைவர்களுடன் இன்று பிற்பகல் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.
தற்போது நிலவும் சிக்கல்கள் தொடர்பாக ஜனாதிபதியுடன் நேரடியாக கலந்துரையாட நாளை வாய்ப்பு ஏற்பாடு செய்யப்படும் என தொழில் ஆணையாளர் நாயகம் தொழிற்சங்கங்களிடம் உறுதியளித்துள்ளார்.பணிப்புறக்கணிப்பு கைவிடப்பட்டதையடுத்து, பாதிக்கப்பட்டிருந்த மின்சார விநியோகம் மற்றும் பராமரிப்பு பணிகளை மீண்டும் வழமையான நிலைக்கு கொண்டுவர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த 09 ஆம் திகதி பிற்பகல் முதல் இந்த தொழிற்சங்க நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டிருந்த நிலையில், அதன் காரணமாக நாட்டின் பல பகுதிகளில் மின்தடை மற்றும் மின்சார பராமரிப்பு பணிகளில் பாதிப்புகள் ஏற்பட்டிருந்தன.
ஜனாதிபதியுடன் நடைபெறவுள்ள நாளைய கலந்துரையாடலுக்குப் பின்னரே தொழிற்சங்கப் போராட்டத்தின் எதிர்கால நடவடிக்கைகள் மற்றும் மின்சார கட்டமைப்பில் உள்ள சிக்கல்களுக்கு தீர்வு காணும் விடயத்தில் இறுதி முடிவு எடுக்கப்படும் என மின்சார தொழிற்சங்கங்கள் மேலும் தெரிவித்துள்ளன.