விமல் வீரவன்சவின் கருத்துத் தொடர்பில் விசாரணை நடத்துமாறு பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவு!
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச செப்டம்பர் 12ஆம் திகதி அநுராதபுரத்தில் நடைபெற்ற பேரணி ஒன்றில், நீதிமன்ற அவமதிப்பில் ஈடுபட்டதாகக் கூறப்படும் விவகாரம் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு பொலிஸ்மாஅதிபருக்கு கொழும்பு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு தொடர்பில் விமல் வீரவன்ச தெரிவித்த கருத்துக்கள் நீதிமன்ற அவமதிப்பாக அமைந்துள்ளதா என்பது குறித்து ஆராய்ந்து நடவடிக்கை எடுக்குமாறு பிரதி மன்றாடியார் நாயகம் ஜனக பண்டார நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்திருந்தார்.
குறித்த பேரணியில் வெளியிடப்பட்ட கருத்துக்கள் அடங்கிய இறுவட்டு (CD) ஒன்றும் இதன்போது நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
சமர்ப்பிக்கப்பட்ட கோரிக்கைகள் மற்றும் சான்றுகளைப் பரிசீலித்த நீதவான், சம்பவம் தொடர்பில் முழுமையான விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.