முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்திற்கு செல்லும் பாதையில் உள்ள நினைவேந்தல் கல் அகற்றப்பட்டமைக்கு கண்டனம்!
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவு முற்றத்திற்கு செல்வதற்கு வழிகாட்டும் நினைவேந்தல் கல் பரந்தன் முல்லைத்தீவு வீதியில் கட்டப்பட்டிருந்த நிலையில் அதனை அகற்றுவதற்கு பொலிஸாரால் நீதிமன்றத்தின் உத்தரவு பெறப்பட்டு குறித்த வழிகாட்டும் நினைவேந்தல் கல் வீதி அபிவிருத்தி அதிகார சபையால் அகற்றப்பட்டுள்ளது. இதற்கு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக் கட்டமைப்பு தனது கண்டனத்தை வெளியிட்டுள்ளது.
அதன் முழு விவரம் வருமாறு,
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பு – வடக்கு, கிழக்கு
முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலை நினைவேந்தல் முற்றத்தின் வழிகாட்டும் நினைவேந்தல் கல் இடித்தழிக்கப்பட்டது.
முள்ளிவாய்க்காலில் நடந்தேறிய தமிழினப் படுகொலையை நினைவேந்துவதற்கான முள்ளிவாய்கால் முற்றத்திற்கு செல்வதற்கான பாதையை சுட்டிக் காட்டுவதற்காக முல்லைத்தீவு பரந்தன் வீதியில் அமைக்கப்பட்டிருந்த வழிகாட்டும் நினைவேந்தல் கல் கடந்த 2026.09.14 அன்று முல்லைத்தீவு நீதிமன்றின் கட்டளையை காரணம் காட்டி வீதி அபிவிருத்தி அதிகார சபையால் இடித்தழிக்கப்பட்டுள்ளமையானது அரச திணைக்களங்கள் ஊடாக தமிழினம் மீதான ஒடுக்குமுறைகள் தடையின்றி தொடர்வதனையே காட்டி நிற்கின்றது.
வகை தொகையின்றி தமிழினம் கொத்துக் குண்டுகளாலும், இன்னும் உலகில் மனித குலத்திற்கெதிரானதென தடைசெய்யப்பட்ட ஆயுதங்களாலும், போர் முறைகளாலும் திட்டமிட்டு அழித்தொழிக்கப்பட்ட இனப்படுகொலையை கண்ணீரோடு நினைவுகூரும் உரிமை தமிழினத்திற்கு மறுக்கப்பட்டுள்ளது என்பதை காட்டி நிற்கும் ஒன்றாகவே இவ் வழிகாட்டும் நினைவேந்தல் கல் இடித்தழிப்பு அமைந்துள்ளது.
முல்லைத்தீவு பரந்தன் வீதியின் வீதியோரங்கள் நெடுகிலும் இராணுவ முகாம்களிற்கான பெயர்ப்பலகைகளும், காவலரண்களும் அனுமதியற்ற கட்டடங்களாகவும், கட்டமைப்புக்களாகவும், அமைக்கப்பட்டுள்ளமை வெளிப்படையானதொன்றாகும். இடித்தழிக்கப்பட்ட இவ் நினைவேந்தல் கல் அப்பால் சில 100M தூரம் தள்ளி முள்ளிவாய்கால் மேற்குப் பகுதியில் பரந்தன் முல்லைத்தீவு வீதியில் அமைக்கப்பட்டுள்ள இராணுவ முகாமின் பெயர் பொறிக்கப்பட்ட கட்டமைப்பு, இதே வீதியில் புதுக்குடியிருப்பு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள இராணுவ வெற்றிச் சின்னம் போன்ற இன்னும் பல கட்டுமானங்கள் அனுமதியற்ற கட்டுமானங்களாகவே உள்ளன.
இந்நிலையில் இவ்வழிகாட்டி, அனுமதியற்ற கட்டடம் என முல்லைத்தீவு பொலிசாரால் கடந்த 2026.06.11 இல் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றில் தொடுக்கப்பட்ட B/692/2026 இலக்க வழக்கின் மீதான கட்டளையாகவே இவ்வழிகாட்டி அமைப்பை அகற்றுமாறு பொறியியலாளர், வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்கு முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றால் கட்டளை வழங்கப்பட்டது.
ஏற்கனவே, முல்லைத்தீவு பொலிஸாரால் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றில் இவ் நினைவேந்தல் கல் மேல் அமைக்கப்பட்டிருந்த “காயமடைந்த பாடசாலைச் சிறுவன் ஒருவன் இரத்தம் தோய்ந்த ஆடையுடன் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முற்றத்திற்கு செல்லும் பாதையை சுட்டிக்காட்டுவது போல்” அமைக்கப்பட்டிருந்த சிலையை அகற்றுவதற்காக வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்ட போதிலும், நீதிமன்றினால் அச்சிலையை அகற்றுவதற்கான கட்டளை வழங்கப்படவில்லை. இருந்த போதிலும் இரவோடிரவாக இனந்தெரியாதோரால் அச்சிலை அகற்றப்பட்டது.
தற்போதைய நிலையில் ஸ்ரீலங்கா பொலிஸாரின் ஆதரவுடன் இந்த முள்ளிவாய்கால் முற்ற வழிகாட்டல் கல்லும் அகற்றப்பட்டிருக்கின்றது. இந்த வகையில் ஸ்ரீலங்காவில் எந்த அரசுகள் ஆட்சிப்பீடம் ஏறினாலும் தமிழர் விரோத செயற்பாடுகளையும், தமிழின அழிப்பு செயற்பாடுகளையும் கட்டமைக்கப்பட்ட வகையில் அரங்கேற்றி வருவது வெள்ளிடைமலை.
ஆகவே ஸ்ரீலங்கா அரசினுடைய இத்தகைய செயற்பாடுகளை நாங்கள் வன்மையாக கண்டிப்பதுடன், தமிழ் மக்கள் மீது நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலைக்கு விரைந்து சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதன் முக்கியத்துவத்தினையும் வலியுறித்தி நிற்கின்றோம்.