உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
27 வியாழன்

செம்மணிப் புதைகுழி வெளிச்சத்திற்கு வரும் நிலையில் அதனை திசை திருப்ப அரசு முயற்சிக்கின்றதா?

இலங்கை செய்திகள் 1 மாதம் முன்
51 பார்வைகள்

நீதி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம், செம்மணிப் படுகொலை புதைகுழிகள் போன்றவை எல்லாம் வெளிச்சத்திற்கு வரக்கூடிய ஒரு நிலையில், அதனைத் திசை திருப்புவதற்காக இப்பொழுது அரசாங்கமே ஒரு புத்தக் கோயிலைக் கட்டுவதனூடாக அதையே ஒரு பேசுபொருளாக மாற்றி, தான் எதிர்கொள்கின்ற அந்தப் பிரச்சினைகளில் இருந்து தன்னை விடுவித்துக்கொள்ள முயற்சிக்கின்றதா என்றொரு கேள்வி எழுகின்றது என ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரும் ஜனநாயக தேசிய கூட்டமைப்பின் பேச்சாளருமான சுரேஸ்பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு வாவிக்கரை வீதியில் உள்ள ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

நீர்கொழும்பு சிறைப் படுகொலைகளைத் தொடர்ந்து, நேற்றுமுன்தினம் நீதி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் பேரவைத்தலைவரிடம் (சபாநாயகரிடம்) கையளிக்கப்பட்டிருக்கின்றது. அது ஒரு செய்தி இருக்க, செம்மணிப் புதைகுழிகள் தொடர்பாக இன்று ஐரோப்பிய ஒன்றியத்தினுடைய கொழும்பில் இருக்கக்கூடிய தூதுவர்கள் இப்பொழுது செம்மணிக்குச் சென்று அங்கும் அந்த நிலவரங்களைப் பார்வையிட்டுள்ளனர்.

ஒருபுறம் நீதிமன்றத்தில் ஏற்பட்ட படுகொலைகள் என்பது, அந்தப் படுகொலைகளைத் தடுக்கத் தவறிய அரசாங்கம் என்பது; மறுபுறத்தில் இலங்கையின் மிகப்பெரிய மனிதப் படுகொலையினுடைய புதைகுழி ஆய்வு என்பது, அதில் 450 மேற்பட்ட உடலங்கள் ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.

அதுமாத்திரமல்லாமல் தலையற்ற உடலங்கள், தலையற்ற எலும்புக்கூடுகளும் இப்பொழுது கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன.

ஆகவே, ஒரு மிக மோசமான இனப்படுகொலையினுடைய சாட்சியமாக இப்பொழுது செம்மணிப் புதைகுழி விவகாரங்கள் என்பதும் ஏற்பட்டு வருகின்றது. இவை நடைபெறுகின்ற அதே சமயம், நேற்றைய தினம் திருகோணமலையில் கன்னியா வெந்நீரூற்றில் ஒரு புத்தக் கோயிலைக் கட்டுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

இவையெல்லாம் எதைக் காட்டுகிறது என்று சொன்னால், ஒருபக்கம் அரசாங்கத்திற்கு எதிராக, முக்கியமாக நீதி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம், செம்மணிப் படுகொலை புதைகுழிகள் போன்றவை எல்லாம் வெளிச்சத்திற்கு வரக்கூடிய ஒரு நிலையில், அதனைத் திசை திருப்புவதற்காக இப்பொழுது அரசாங்கமே ஒரு புத்த கோயிலைக் கட்டுவதனூடாக அதையே ஒரு பேசுபொருளாக மாற்றி, தான் எதிர்கொள்கின்ற அந்தப் பிரச்சினைகளில் இருந்து தன்னை விடுவித்துக்கொள்ள முயற்சிக்கின்றதா என்றொரு கேள்வி எழுகின்றது.

ஏற்கனவே, கன்னியா விடயத்தைப் பொறுத்தவரையில், அதில் நீதிமன்றத் தீர்ப்பொன்று இருக்கிறது அங்கு கட்டுமானங்கள் எதுவும் செய்யக்கூடாது என்று இருக்கிறது.

அப்படி இருக்கத்தக்கதாக, நேற்றைய தினம் அங்கு அடிக்கல் நாட்டுகின்ற ஒரு நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அங்கு ஒரு புத்தக் கோயில் புதிதாகக் கட்டுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது. ஆகவே, ஏற்கனவே இருந்த நீதிமன்ற ஆணைகளுக்கு அப்பாற்பட்டுச் சென்று, இராணுவமோ அல்லது புத்த பிக்குகளோ தங்களுடைய விருப்பத்திற்குச் செய்கிறார்களா, இல்லை அரசாங்கத்தினுடைய நிகழ்ச்சி நிரலின்படி, வழிகாட்டுதலின்படி இவை நடைபெறுகிறதா என்றொரு கேள்வி எழுகின்றது. ஏனென்றால், நாட்டில் பாரிய பிரச்சினைகள் வருகின்ற பொழுது, அந்தப் பாரிய பிரச்சினைகளைத் திசைதிருப்பும் முகமாகத் தமிழ்த் தரப்பையும் சரி, சிங்களத் தரப்பையும் சரி வேறு ஒன்றில் ஒன்றிணைய வைத்துவிடுவது. ஆகவே, அவர்கள் அதை மாத்திரம் பேசிக்கொண்டிருப்பார்கள்.

இப்பொழுது அதை நிறுத்தச் சொல்லித் தமிழ் தரப்பு பேச, அதைக் கட்ட வேண்டும் என ஒரு சிங்கள அதி தீவிரவாதச் சக்திகள் அல்லது இனவாதச் சக்திகள், “இல்லை, இல்லை அதை கட்ட வேண்டும்” என்று பேச முக்கியமான பிரச்சினை திசைதிருப்பப்படுகின்ற ஒரு போக்கைத்தான் பார்க்கின்றோம்.

ஏனென்றால், இவ்வளவு நாளும் இல்லாமல் திடீரென்று நேற்றைய தினம் அதைக் கட்ட வேண்டிய ஒரு தேவை ஏன் ஏற்பட்டது? அதேபோலத்தான் செம்மணிப் புதைகுழி தொடர்பாகவும் ஒரு பன்னாட்டு நீதி, பன்னாட்டு நியாயம் என்பது கோரப்படுகிறது. அரசாங்கம் நிச்சயமாக அதற்கு ஒரு தீர்வைக் கொண்டுவர மாட்டாது. இராணுவத்திற்கு ஆட்களைச் சேர்த்துக் கொடுத்துப் போரைப் புரிந்தவர்களில் இந்த அரசாங்கத்திற்கும் ஒரு பங்கு இருக்கிறது. அவ்வாறானவர்கள், “இராணுவத்தைத் நாங்கள் காப்பாற்றுவோம்” என்று ஐ.நா. மனித உரிமைகள் ஆணையகம் தொடக்கம் எல்லா இடத்திலும் சொன்னவர்கள், இந்தச் செம்மணிப் புதைகுழி பற்றி ஒரு விரிவான ஒரு விசாரணையைச் செய்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயமும் அந்தப் பாதிப்பை உருவாக்கியவர்களுக்கான தண்டனையையும் இவர்கள் கொடுப்பார்களா என்பது எல்லாம் நிச்சயமாக அது நடைமுறையில் சாத்தியமற்ற ஒரு விடயம்.

ஆகவே, ஒரு குற்றவாளிகளே குற்றங்களை விசாரிப்பது என்பதிலும் பார்க்க, ஒரு பன்னாட்டு விசாரணை என்பது மிக மிக முக்கியம் என்று நாங்கள் நம்புகின்றோம். ஆகவே, இப்பொழுது ஐரோப்பிய ஒன்றியமும் அதைச் சென்று பார்வையிடும் அதே சமயம், யாழ்ப்பாணத்தில் அதற்கு எதிரான ஒரு போராட்டமும் (புரோட்டஸ்ட்), அந்த பன்னாட்டு விசாரணையைக் கோரிய ஒரு போராட்டமொன்றும் அங்கு நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இவ்வாறான சூழ்நிலையில், அரசாங்கம் இவை எல்லாவற்றையும் திசை திருப்புவதற்காகத்தான் இப்போது கன்னியா வெந்நீரூற்றில் ஒரு புதிய பிரச்சினையை ஆரம்பித்திருக்கிறது என நம்புகின்றோம்.

ஆனால் அதேசமயம், இந்த அரசாங்கமும் கூட உங்களுக்குத் தெரியும், குச்சவெளி பிரதேச சபை என்று ஒன்று திருகோணமலை மாவட்டத்தில் இருக்கிறது. அங்கு முஸ்லிம் மக்களும் தமிழ் மக்களும்தான் பெரும்பான்மையாக வாழ்கின்றனர். சிங்கள மக்கள் என்பது ஒரு வீதம் கூடக் கிடையாது. ஆனால், அங்கு கூட புத்த கோயில்கள் கட்டப்பட்டுக்கொண்டிருக்கிறது.

சிங்கள மக்களே இல்லாத ஒரு பிரதேசத்தில், ஒரு சிறிய பிரதேச சபை எல்லைக்குள் முஸ்லிம் மக்கள், தமிழ் மக்கள் அங்கு வாழக்கூடிய ஒரு பிரதேசத்தில் 28 புத்த கோயில்களை யார் வழிபடுவதற்காகக் கட்டுகிறீர்கள்? என்று பார்த்தால், இந்த அரசாங்கமும் கூட மட்டக்களப்பிற்கு வந்தாலென்ன, யாழ்ப்பாணம் வந்தாலென்ன எல்லோரும் என்ன கூறுகிறார்கள்? “நாங்கள் இனவாதிகள் அல்ல, நாங்கள் மதவாதிகள் அல்ல, நாங்கள் அனைவரும் சமத்துவமானவர்கள்” என்று சொல்லிக்கொண்டே இந்த விசயங்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

ஆகவே, இந்த அரசாங்கம் பற்றிய ஒரு புரிதலை முதல் தமிழ் மக்கள் பார்க்க வேண்டும். அது வடக்கிலும் சரி, கிழக்கிலும் சரி, தமிழ் மக்கள் இந்த அரசாங்கம் தங்களுக்கு ஏதோ ஒரு விதமான தீர்வுகளைக் கொண்டுவரும், தங்களது பிரச்சினைகளை நிறைவேற்றும் என்று நம்பி வாக்களித்தார்கள். அது எங்களுக்கு மாத்திரமல்ல, சிங்கள மக்களினுடைய தேவைகளும் இந்த கடந்த இரண்டு வருடத்தில் நிறைவேற்றப்பட்டதாக வரலாறு இல்லை.

ஆகவேதான், இப்பொழுது சிறுபான்மை தேசிய இனங்களைச் சேர்ந்த ஆறு கட்சிகள் ஒன்றுசேர்ந்து ஒரு தளம் ஒன்றை உருவாக்கியிருக்கிறார்கள். அது முஸ்லிம்களாக இருக்கலாம், மலையகத் தமிழ் மக்களாக இருக்கலாம், வடக்கு-கிழக்குத் தமிழ் மக்களாக இருக்கலாம், அவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தக்கூடிய கட்சிகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து இப்பொழுது ஒரு தளம் ஒன்றை உருவாக்கியிருக்கிறார்கள். இந்தத் தளத்தினுடைய முக்கிய நோக்கம், இவர்கள் பொதுவாக எதிர்கொள்ளக்கூடிய பிரச்சினைகளைக் கையாள்வது.

ஆகவே, இப்பொழுது இவர்கள் முக்கியமான மூன்று பிரச்சினைகளை இனம் கண்டிருக்கிறார்கள். மாகாண சபைத் தேர்தல் என்பது உடனடியாக நடத்தப்பட வேண்டும். வடமாகாணத்தில் 07 வருடமாக, கிழக்கு மாகாணத்திற்கு அதற்கு மேலதிகமாக இருக்கலாம், ஏனைய பகுதிகளில் 10 வருடங்களாக இந்தத் தேர்தல் நடக்காமல் இழுபறியில் இருக்கின்றது. இப்பொழுது எல்லோருமே, இலங்கை அரசாங்கமும் “நாங்கள் தேர்தல் நடத்துவோம்” என்று கூறுகிறார்கள், ஆனால் அதனைப் பிற்போடுவதற்கான சகல நடவடிக்கைகளையும் அவர்கள் மேற்கொள்கிறார்கள். ஆனால், எதிர்த்தரப்பில் இருக்கக்கூடிய அனைத்துச் சிங்கள எதிர்க்கட்சிகளும் சரி, தமிழ்க் கட்சிகளும் சரி, முஸ்லிம் கட்சிகளும் சரி, மலையகக் கட்சிகளும் சரி எல்லோரும் சொல்கிறார்கள், “இந்த மாகாண சபைத் தேர்தல் என்பது உடனடியாக நடத்தப்பட வேண்டும்.” ஆனால், நாடாளுமன்றத்தில் ஒரு சிறிய சட்டத்திருத்தத்தினூடாகச் செய்ய வேண்டிய ஒரு விடயத்தை, அவர்கள் ஒரு நாடாளுமன்றத் தெரிவுக்குழு ஒன்றை நிறைவேற்றி, அந்த நாடாளுமன்றத் தெரிவுக்குழு இந்தத் தேர்தலை எப்படி நடத்துவது என்று ஓர் அறிக்கையைக் கொடுக்கும் என்று சொல்லப்படுகிறது. அது எப்படி, எப்படியான அறிக்கையை இந்த நாடாளுமன்றம் எதிர்பார்க்கிறது என்று சொல்லிச் சொன்னால், இப்பொழுது இருக்கக்கூடிய விகிதாசாரப் பிரதிநிதித்துவத்தை மாற்றி, ஒரு கலப்பு முறைமை – விகிதாசாரப் பிரதிநிதித்துவமும் தொகுதி வாரியாகவும் இரண்டறக் கலந்த ஒரு முறைமையை உருவாக்கி, அதனூடாக ஒரு மாகாண சபைத் தேர்தலை நடத்த வேண்டும். அங்கு இளைஞர்களுக்கும் பெண்களுக்கும் இடமளிக்க வேண்டும். அவ்வாறான ஒரு விடயத்தைச் செய்வதாக இருந்தால், இலங்கை முழுக்க இந்த மாகாண சபைக்கான எல்லைகளை வகுக்க வேண்டும். அதாவது மாகாண எல்லைக் குழு, மாகாணத்து எல்லைகளை நிர்ணயிப்பதற்கான, தொகுதிக்கான எல்லைகளை நிர்ணயிப்பதற்கான ஒரு எல்லைக் குழு என்று சொல்லிச் சொல்வார்கள்.

அப்படியான எல்லை நிர்ணயக் குழுவொன்று நியமிக்கப்பட வேண்டும். இந்த எல்லை நிர்ணயக் குழு நியமிக்கப்படுமாக இருந்தால், அது நிச்சயமாக அடுத்த ஒன்று, இரண்டு வருடங்களுக்கு மேல் தனது அறிக்கையைச் சமர்ப்பிப்பதற்கான காலத்தை எடுத்துக்கொள்ளும். அப்படி எடுக்குமாக இருந்தால், இந்த மாகாண சபைத் தேர்தல் இன்னும் பிற்போடப்படலாம் என்பதுதான் இப்பொழுது இருக்கக்கூடிய உண்மை.

ஆகவே, இந்த நேரத்தில் இந்த ஆறு கட்சிகளைச் சேர்ந்த தளம் என்பதும், குறிப்பாகச் சிறுபான்மை தேசிய இனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்துபவர்கள் என்ற அடிப்படையில், ஆளுநர்களை வைத்துக்கொண்டு என்னென்ன பித்தலாட்டங்கள் எல்லாம் வடக்கு – கிழக்கில் நடைபெறுகிறது. அங்கிருக்கக்கூடிய தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதித்துவம் என்பதை மறுத்து, ஆளுநரை வைத்துக்கொண்டு தாம் விரும்பிய அனைத்தையும் செய்வதற்கான நடவடிக்கைகளை இவர்கள் மேற்கொள்கிறார்கள்.

அது இப்பொழுது நான் உங்களுக்குக் குறிப்பிட்ட கன்னியா வெந்நீரூற்றுப் பிரச்சினையாக இருக்கலாம் அல்லது குச்சவெளி பிரதேச சபையில் நடக்கக்கூடிய பிரச்சினைகளாக இருக்கலாம் அல்லது ஏனைய பல்வேறுபட்ட பிரச்சினைகளாக இருக்கலாம். தமது ஆளுநர்களை வைத்துக்கொண்டு, அவர்களையும் மௌனிகளாக்கி, தாங்கள் விரும்பிய அனைத்தையும் செய்கின்ற ஒரு போக்கைத்தான் நாங்கள் பார்க்கின்றோம்.

ஆகவே, இந்த அரசாங்கம் தான் விரும்பியவற்றைச் செயல்படுத்துவதாக இருந்தால், மாகாண சபை தேர்தல் நடத்தக்கூடாது. தமது ஆளுநர்களூடாகத் தாங்கள் விரும்பியவற்றைச் செய்ய வேண்டும் என்றொரு யோசனையில் அவர்கள் இருக்கிறார்கள் என்று நம்புகிறேன். ஆகவே, அந்த அடிப்படையில் இப்பொழுது இருக்கக்கூடிய இந்த ஆறு கட்சித் தளம் இது தொடர்பாக இராஜதந்திரிகளுடன் பேச இருக்கிறார்கள்.

அதுமாத்திரமல்லாமல், இவர்கள் எதிர்நோக்குகின்ற அடுத்த பிரச்சினை: இந்த அரசாங்கம் பதவிக்கு வருகின்ற பொழுது முக்கியமாகச் சொல்லப்பட்டது, “ஒரு புதிய அரசியலமைப்பு வரும்; அந்தப் புதிய அரசியலமைப்பு என்பது அதிகபட்ச அதிகாரங்களை இங்கு இருக்கக்கூடிய ஏனைய இனங்களுக்கு வழங்கக்கூடிய வகையில் ஒரு புதிய அரசியலமைப்பு கொண்டுவரப்படும்” என்று சொல்லப்பட்டது.

ஆனால், அந்தப் புதிய அரசியலமைப்பு கொண்டுவருவதற்கான அடிப்படை வேலைகள் எதுவுமே தொடங்கப்படவில்லை. மாறாக, அது கடைசி வருடத்தில் நடக்கலாம் என்று ஒரு கதை பேசப்படுகிறது. ஆனால் உண்மையாகவே, இந்த அரசாங்கமும் தொடர்ச்சியாக நிறைவேற்று அதிகாரமுள்ள குடியரசுத் தலைவர் (ஜனாதிபதி) முறைமையைத் தாங்கள் தக்கவைத்துக்கொள்ளவே விரும்புகிறார்கள். அதனை இல்லாமல் செய்வோம் என்று அவர்களது தேர்தல் அறிக்கையில் கூறினாலும் கூட, அதிகாரத்திற்கு வந்து அந்த அரியணையில் உட்கார்ந்தால், “நாங்கள் நிறைவேற்று அதிகாரமுள்ள குடியரசுத் தலைவர் முறைமையை இல்லாமல் செய்வோம்” என்று வந்தவர்கள், அதற்கு எதிராகத்தான் இப்பொழுது செயல்படுகிறார்கள்.

அதுமாத்திரமல்லாமல், தமிழ் மக்களோ முஸ்லிம் மக்களோ கோரக்கூடிய ஓர் அதிகபட்ச அதிகாரப் பகிர்வு என்ற விடயத்திலும் கூட, அவர்கள் அதற்கான எண்ணங்களோ உறுதிப்பாடுகளோ அவர்களிடத்தில் இல்லை என்றும் நாங்கள் நம்புகின்றோம்.

ஆகவே, அந்த வகையில் ஒட்டுமொத்தமான தமிழ் பேசும் மக்களுக்கு அவர்கள் மலையகத்தில் இருந்தாலும், வடக்கு – கிழக்கில் இருந்தாலும் இருக்கக்கூடிய தமிழ் பேசும் மக்களுக்கு இந்த அரசாங்கம் மாகாண சபைத் தேர்தல்களை நடத்தி, அதிகாரங்களை அந்த மக்களின் கைகளில் ஒப்படைக்க வேண்டும். அப்பொழுதுதான் நமது நிலங்கள் குறைந்தபட்சம் பாதுகாக்கப்படும். நமது நடவடிக்கைகள், நமது மக்களுக்கான நடவடிக்கைகளைக் குறைந்தபட்சம் நாங்கள் முன்னெடுக்க முடியும்.

இந்த அரசாங்கத்திடம் நான் ஒரு கேள்வி கேட்க விரும்புகிறேன், வடக்கு – கிழக்கு மாகாணத்தில் என்னென்ன வளர்ச்சிகள் இதுவரை செய்யப்பட்டிருக்கிறது. புதிதாக இவர்கள் வந்து என்னென்ன வளர்ச்சித் திட்டங்கள், எத்தனை பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டத?, ஏதாவது தொழிற்சாலைகள் உருவாக்கப்பட்டிருக்கிறதா?, ஏதாவது முதலீடுகள் கிழக்கு மாகாணத்திற்கு வந்திருக்கிறதா? இவர்கள் சொல்லக்கூடிய ‘வளர்ச்சி’ என்பது என்ன? ஒழுங்கைகளுக்குத் தார் ஊற்றுவதா அல்லது வீதிகள் சீரமைப்பதா அல்லது சுடலைகள்… இதெல்லாம் உள்ளூராட்சி மன்றங்கள் செய்கின்ற வேலைகள்! இந்த அரசாங்கம் வந்து ‘வளர்ச்சி’ என்று பெரிய குரலெழுப்புகிறார்கள். வடக்கிற்கு வந்தாலும் சரி, கிழக்கிற்கு வந்தாலும் சரி பெரிய குரல்களை நாங்கள் கேட்கிறோம். “நாங்கள் பொருளாதார ரீதியாக முதல் நாட்டை முன்னேற்றிக் கொண்டுதான் அடுத்தடுத்த கட்ட நடவடிக்கைகள்” என்று கூறுகிறார்கள். அந்த வகையில், இரண்டு வருடங்கள் முடியக்கூடிய ஒரு சூழ்நிலையில், வடக்கு மாகாணத்திலோ கிழக்கு மாகாணத்திலோ, திருகோணமலையிலோ, மட்டக்களப்பிலோ, அம்பாறையிலோ, ஏனைய மாகாணங்களிலோ என்னென்ன வளர்ச்சித் திட்டங்களை இவர்கள் செய்திருக்கிறார்கள்? எத்தனை பேருக்கு வேலைவாய்ப்பு கொடுத்திருக்கிறார்கள்? எவ்வளவு தூரம் முதலீடுகளை இந்தப் பகுதிகளுக்குக் கொண்டுவந்திருக்கிறார்கள்? இந்தப் பகுதிகளினுடைய முதலீடுகள் ஊடாக ஏதாவது வேலைவாய்ப்புகள் ஏற்பட்டிருக்கிறதா? என்பதை அரசாங்கம் சொல்ல வேண்டும்.அ தனை மக்கள் அலசி, ஆராய்ந்து தமது எதிர்காலப் பயணத்தைத் திட்டமிட வேண்டும்.

ஐந்து கட்சிகள் ஒரு கூட்டுக் கூட்டணியாகச் செயல்பட்டு வருகின்றன. ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, தமிழீழ விடுதலை இயக்கம், தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம், ஜனநாயகப் போராளிகள் கட்சி, மற்றும் சந்திரகுமாரினுடைய சமத்துவக் கட்சி என்று சொல்லப்படுவது.

நாங்கள் ஓர் ஐக்கிய முன்னணியாக, ஓர் அரசியலமைப்பின் (யாப்பின்) அடிப்படையில், ஓர் இணைத் தலைமையின் அடிப்படையில், ஒரு பதிவு செய்யப்பட்ட ஒரு முன்னணியாக, அதற்கான ஒரு சின்னத்துடன் இந்த ஐந்து கட்சிகளும் கடந்த மூன்று, நான்கு வருடங்களாகச் செயல்பட்டு வருகின்றன.

ஏனையோரையும் இணைத்துச் செயல்படுவதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம். தமிழரசுக் கட்சியுடன் அது தொடர்பாகக் கடந்த நான்கு மாதங்களாகச் சந்திப்புகள் நடைபெற்று வருகின்றன.

அவர்களுக்கும் நாங்கள் சொல்லியிருக்கிறோம், “நாங்கள் என்ன மாற்றங்களையும் செய்யலாம்.” அதாவது, இப்பொழுது ஜனநாயகத் தமிழ் தேசியக் கூட்டணியினுடைய பெயரை மாற்ற வேண்டும் என்று சொன்னால் பெயரை மாற்றலாம்; சின்னத்தை மாற்ற வேண்டும் என்பதாக இருந்தால் சின்னத்தை மாற்றலாம். ஆனால் நாங்கள் உதிரிகள் போலச் செயல்படாமல் ஒரு கட்டமைப்புக்குள் செயல்பட வேண்டும். ஒரு வடிவமைப்பு ஒன்று உருவாக்கப்பட வேண்டும்.

ஆகவே, தமிழ் மக்களினுடைய நலன்களை எதிர்காலத்தில் கவனத்தில் கொண்டு இப்போது தேர்தலுக்கான காலகட்டம் இதுவல்ல. மாகாண சபை கூட இப்போது வரும் என்ற நம்பிக்கை யாருக்கும் கிடையாது. ஆகவே தேர்தல் என்பதை ஒருபுறம் ஒதுக்கி வைத்துவிட்டு, நாங்கள் தமிழ் மக்களினுடைய அதிகாரங்களை, உரிமைகளைப் பெற்றுக்கொள்வது என்ற அடிப்படையில் இணைந்து செயல்பட வேண்டும் என்ற தேவைகள் இருக்கிறது.

உள்நாட்டிலும் சரி, வெளிநாட்டிலும் சரி பல குழுக்கள், பல அமைப்புகள் இருக்கின்றன. ஆகவே, இப்போது எங்களைப் பொறுத்தவரையில் தமிழ் மக்களினுடைய அதிகாரங்களைப் பெற்றுக்கொள்வது, தமிழ் மக்களினுடைய உரிமைகளைப் பெற்றுக்கொள்ளக்கூடிய அனைவரும் அவ்வாறான ஓர் அணியில் திரண்டு, அரசாங்கத்திற்கான அழுத்தங்களைக் கொடுக்க வேண்டும் என்ற ஒரு தேவை ஏற்பட்டிருக்கின்றது. அது தொடர்பாக நாங்கள் பேசி வருகிறோம். எங்களுடன் பேச முன்வருபவர்களுடன் நாங்கள் பேசுவதற்கும் தயாராக இருக்கின்றோம் முதற்கட்டமாகத் தமிழரசுக்கட்சியுடன் பேசி வருகின்றோம். ஏனென்றால், அவர்கள் வடக்கு – கிழக்கில் ஒரு கட்சியாக நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கக் கூடியவர்களாகவும் இருக்கின்ற காரணத்தினால், முதற்கட்டமாக அவர்களுடன் பேசி வருகிறோம். ஏனைய கட்சிகளுடன்… நாங்கள் ஏற்கனவே அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் அல்லது தமிழ் தேசிய மக்கள் முன்னணியுடன் பேசி இருந்தாலும் கூட, அவர்களுக்கும் எங்களுக்கும் இடையில் மாகாண சபைத் தேர்தல் தொடர்பாக, அதனுடைய அதிகாரங்கள் தொடர்பாகக் கொஞ்சம் வித்தியாசமான கருத்துகள் இருப்பதால், அவை அந்த விடயங்கள் பேசித் தீர்க்கப்பட்டால் மாத்திரம்தான் தொடர்ந்து நாங்கள் அவர்களுடன் பேச முடியும் என்ற நிலவரங்களும் இருக்கின்றது.

ஆகவே, படிப்படியாக அவ்வாறான ஒரு நிலவரத்தை உருவாக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். அப்படி உருவாக்க முயற்சிப்பவர்களை ஏனையோர் ஆதரிக்க வேண்டும் என்பது மாத்திரமல்ல, அவர்களை வலுப்படுத்த வேண்டும்; அவர்களுக்கு ஒத்தாசையாக இருக்க வேண்டும் என்றும் நாங்கள் கேட்டுக்கொள்ள விரும்புகின்றோம்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

இரண்டு வாகனங்கள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து.!

ஹட்டன் கினிகத்தேன பிரதான வீதியில் இரண்டு வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. நேற்று மாலை வேளையில் தலைநகர் கொழும்பில் இருந்து ஹட்டன் நோக்கி வந்த பாரவூர்தியும்…

27 0 0
இலங்கை செய்திகள்

முஹம்மது நபி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்வு.!

இஸ்லாத்தின் ஆசான், முஹம்மது நபி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு ஹட்டன் ஜும்மா பள்ளிவாசலில் ஒரு சிறப்பு கொண்டாட்ட நிகழ்ச்சி நேற்று 26 ஆம் திகதி நடைபெற்றது. இந்தப்…

48 0 0
இலங்கை செய்திகள்

நீரில் மூழ்கி ஒருவர் உயிரிழப்பு.!

திக்வெல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பதிகம கடற்கரையில் நேற்று புதன்கிழமை (26) நீராடச் சென்ற நபரொருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் திக்வெல்ல பிரதேசத்தைச் சேர்ந்த…

43 0 0
இலங்கை செய்திகள்

சமூக ஊடகங்களில் சிறுவர்கள், பெண்களின் புகைப்படங்கள் விற்பனை; அவசர எச்சரிக்கை.!

முகநூல் உள்ளிட்ட முன்னணி சமூக ஊடக வலைத்தளங்களில் பல்வேறு குழுக்களை உருவாக்கி, சிறுவர்கள் மற்றும் பெண்களின் ஆபாச காணொளிகள் மற்றும் தனிப்பட்ட புகைப்படங்களை பணத்திற்கு விற்கும் மற்றும்…

48 0 0